புயலமை கூந்தற் பொலந்தொடி சான்றோர் கயவர்க் குரையார் மறை - பழமொழி நானூறு 229

இன்னிசை வெண்பா

நயவர நட்டொழுகு வாரும்தாம் கேட்ட
துயவா தொழிவார் ஒருவரு மில்லை
புயலமை கூந்தற் பொலந்தொடி! சான்றோர்
கயவர்க் குரையார் மறை. 229

- பழமொழி நானூறு

பொருளுரை:

மேகம் போன்றமைந்த கூந்தலையும் பொன்னாலாகிய தொடியையும் உடையாய்!;

அன்போடு பொருந்தத் தம்மோடு நட்புப் பூண்டவர்களும் தாம் கேட்டறிந்த மறையை பிறரிடம் கூறி ஆராயாது நீக்குவார் ஒருவரும் இல்லை என்றாலும் அறிஞர்கள் கீழ்மக்கட்கு இரகசியத்தை உரைத்தலிலர்.

கருத்து:

கீழ்மக்களிடம் இரகசியத்தை உரைத்தலாகாது.

விளக்கம்:

கீழ்மக்களிடம் தாம் சூழ்ந்திருத்தலை உரைப்பின் அவரால் அது பரவப்பட்டு அதற்கு மாறானவை மேற்பட்டு இடையூறு பயக்குமாதலின் சான்றோர், அவரிடம் உரையார்.

மறை நட்டாரிடம் கூறப்பட்டு ஆராயப்படுமாயினும் கீழ்மக்களிடம் உரைத்தலாகாது என்பதாம்.

மறை - வெளிப்படிற் குற்றம் விளையுமென்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல்,செய்த செயல் முதலியன.

'சான்றோர் கயவர்க் குரையார் மறை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-22, 11:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே