தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தனென் றெள்ளப் படும் – நாலடியார் 340

இன்னிசை வெண்பா

கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும் 340

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

தான் கற்ற கல்வியும், காட்சி பரந்த தன் சாயலும், தனது உயர் குடிப்பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமையடையும்;

அவ்வாறன்றித் ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்தால், தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்றுஉலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

கருத்து:

பேதைமை, பிறர் கருத்தறியாது அவர் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மையுடையது.

விளக்கம்:

கற்றனவும் என்றமையால் அறிவும், சாயலும் என்றமையால் அழகும், இற்பிறப்பும் என்றமையால் இவ்விரண்டிற்கும் ஏதுவான இயற்கைச் சார்புங் கொள்க.

தான் உரைத்தலால், பிறர், தன் மகிழ்ச்சிக்குரியது இச்சை பேசுதலென்றறிந்து அதுவே பேசுவாராய்ப் பல்க, அதனால் தன் அறிவு நிலை திரிந்து பித்துடையதாகும் என்பது பின் வரிகளின் கருத்து.

மைத்துனரென்னுங் குறிப்பால், அவ்விச்சை பேசுதலும் பகடி செய்யுங் கருத்தால் என்பது பெறப்படும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-22, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே