உயிருடன் தொடர்ந்து செல்லும் பிணி அறியாமையே – அறநெறிச்சாரம் 205
நேரிசை வெண்பா
உடன்பிறந்த மூவ ரொருவனைச் சேவித்
திடங்கொண்டு சின்னாள் இருப்பர் - இடங்கொண்ட
இல்லத் திருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன்பின் சிறந்து 205
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
உயிர் பிறக்கும் பொழுது உடன் தோன்றிய காம வெகுளி மயக்கங்கள் தம்மை வழிபடுமாறு அதனை அடிமை கொண்டு சிலகாலம் அதனோடு உடலிடை உறையா நிற்கும்;
பின்னர் இடமாகக் கொண்ட உடலொடு காம வெகுளிகள் நீங்க, மயக்கமானது அவ்வுயிரை விடாது தொடர்ந்து செல்லும்.
குறிப்பு:
உயிர்களுக்கு அவிச்சை அநாதியே உள்ளதென்பதும் உடலோடு கூடி நின்ற வழியே காம வெகுளிகள் தோன்றுமென்பதும் இதனாற் கூறினார்.