கீழ்தான் உறங்குவம் என்றெழுந்து போமாம் – நாலடியார் 342
நேரிசை வெண்பா
காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் எனஉரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன்(று) உரைத்து 342
- கீழ்மை, நாலடியார்
பொருளுரை:
உறுதியாகிய மெய்ந்நூலுணர்வு கொண்டு வினை நீங்கிய மேலோர் பக்கல் நாம் காலம் தாழாது சென்று பயனுறுவோம் என்று அறிந்தோர் எடுத்துக் காட்டினால், கீழ்மகன் தூங்குவோம் வாருங்கள் என்று எழுந்து போவான், அஃதன்றி வேறு வம்பு பேசி மாறுபடுவான்.
கருத்து:
இருந்தால் வாளா கிடத்தலும், யாதேனுஞ் செய்தால் பழுது செய்தலுங் கீழோர் இயல்பாகும்.
விளக்கம்:
காழ் என்றது ஈண்டு மெய்யுணர்வு; "காழ் இலா மம்மர் கொள்மாந்தர்"1 என்றார் முன்னும்.கலங்குதல் இல்லாததென்பது பொருள்.
உறங்குவம் என்னும் உளப்பாட்டுப் பன்மை உரைத்தோரையும் உட்கொண்டு நின்றது;.
மற்றொன்றென்றது குறிப்பாற்றீமை மேற்று!
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
