179 ஏவலரை இகழ்வோர் இறையடி எய்தார் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 6
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)
சிலதரு நரரே யங்கஞ்
= சீவனெஞ் சவர்க்கு முண்டாம்
நலநவை யின்ப துன்ப
= நானிலத் துளஅ வர்க்கும்
நிலமிசை யவரைச் செய்தோன்
= நித்தனே யவரை யேதும்
புலனிலாப் பொருள்போ லெள்ளும்
= புல்லர்வீ டில்லர் மாதோ. 6
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஏவல் செய்வோரும் மனிதர்களே. அவர்களுக்கும் உறுப்பு, உயிர், உள்ளம் உண்டு. நன்மை தீமை இன்ப துன்பம் முதலியன நால்வகையான நிலத்தில் அவர்களுக்கும் உண்டு. இவ்வுலகில் அவரைப் படைத்தவனும் முழுமுதற் கடவுளே.
அதனால், அவர்களை உணர்வு இல்லாப் பொருள் போல் இகழும் கீழ்மையான குணமுடையோர்க்கு இறைவனை அடையும் பேரின்பம் இல்லை” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சிலதர் - ஏவல் செய்வோர். நரர் – மனிதர்,
நவை - தீமை. நானிலம் - குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நான்கு பிரிவினவாகிய உலகம். புலன் - உணர்வு