இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் - பழமொழி நானூறு 235

நேரிசை வெண்பா

சிறிதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும். 235

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெறுதற்கரிய இடத்துள் ஒருவன் இருக்க இடம் பெற்றால் படுத்தற்குரிய இடத்தையும் பெற்றுவிடுவான்; அதுபோல, செல்வரை அடைந்தவர்கள் முன்னர்ச் சிறிய அளவிற்றாய கூழினைப் பெற்று பின்னர் மிகுந்த அளவிற்றாய உணவினையும் பெறுவர்.

கருத்து:

தக்கவர்களைச் சார்ந்தொழுகின் மிகுந்த பயனை அடையலாம்.

விளக்கம்:

இருக்க இடம் பெற்றான் படுக்க இடமும் பெற்றது போல, செல்வரைச் சார்ந்து ஒழுகுவார் முன்னர் மிகச் சிறிய உணவு பெறினும், பின்னர்ப் பெரியதாய உணவினைப் பெறுவர் ஆகவே, தக்க இடத்தைச் சார்ந்தொழுக வேண்டும்.

'இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Dec-22, 9:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே