கடல் அலையும் அவனும்

கடல் அலையும் அவனும்

அவனை கடல் அலை ஆரத்தழுவி உள்ளிழுத்து கொண்டது. அதன் அணைப்பில் மூச்சு திணறல் இருந்தாலும் நொடிப் பொழுதில் அவை காணாமல் போய் அதன் அணைப்பின் சுகத்தில் தன்னை இழந்து நின்றான்
மெல்ல அதன் அணைப்பிலிருந்து அவனை விடுவித்த அலை இப்பொழுது இழுத்து சென்று கொண்டிருக்கிறது. அவனும் அதனுடனே முழு உடலோடு, ஆனால் உணர்வுகளோடு அது இழுத்து செல்லும் பக்கங்களில் எல்லாம் சென்று கொண்டிருக்கிறான்.
பட்டென எதிலோ மோதியதில் தடை பட்டு நின்றது அவன் பயணம். அவனை தடுத்தது எது? விழித்து பார்க்க அவன் கண்கள் ஆச்சர்யமாய் விரிந்தது. மிகப்பெரிய நீளமான வாள் அந்த இருளிலும் தக தகவென்று ஒளி வீசியது.
அந்த வாளை தொட்டு பார்க்கவே பயந்தான், அப்படி ஒரு பளபளப்பு. எப்படி இத்தனை நாள் இதனுள் இருந்தும், பளபளப்பு குறையாமல் இருக்கிறது?
வாள் தானாக சுழன்று இவன் கழுத்தின் மீது வந்து சட்டென நின்றது. இவனுக்கு உயிர் மூச்சே இல்லாமல் நின்று போயிருந்தது.
கடகடவென சிரிக்கும் சத்தம்..?
யார்? யார் சிரித்தது?
கடல் அலை நான்தான் சிரித்தேன், எப்படி பயந்து நடுங்குகிறாய் பார், அதை கண்டு சிரித்தேன்.
கோபமாய் பார்த்தான், இது சிரிக்க கூடிய விசயமா? பெரிய பட்டாக்கத்தி என் கழுத்தை சீவுவதற்காக வந்து நிற்கிறது பயப்படாமல் இருக்க முடியுமா?
மீண்டும் மீண்டும் சிரித்த அலை கவலைப்படாதே, அது என் அசைவில்தான் இருக்கிறது, இந்நேரம் இந்த வாளுக்குரியவன் கையில் இருந்திருந்தால் உன் தலை எங்கோ பறந்திருக்கலாம்.
வாளுக்குரியவனா? இது போர் வாளா?
ஆம் யாருடையது என்கிறாய்? “செங்கிஸ்கான்” கையில் இருந்த வாள், போர் என்றவுடன் பல்லாயிரம் தலைகளை வெட்டி வீழ்த்திய வாள் இது.
அது எப்படி இங்கு?
எதை எப்படி இங்கு என்று கேட்கிறாய்?
அவன் எப்பொழுதோ மங்கோலியத்தை ஆண்டவன், அவனது வாள் இங்கு எப்படி வந்தது?
மீண்டும் கட கடவெனெ சிரித்தது கடல் அலை
நீ எங்கிருந்து வருகிறாய்?
நான் சென்னையில் கடலோரமாய் உன்னை இரசித்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வேகத்தில் உன்னை அணைக்கவேண்டும் என்று உன்னிடம் வந்தேன்.
பொய் சொல்கிறாய், என்னை அணைக்கவேண்டும் என்றா?
இல்லையில்லை வாழ்க்கை போதுமென்றுதான் உன்னிடம் வந்தேன்.
அதாவது வாழபிடிக்காமல் கோழையாய்..!
நிறுத்து கோழை என்றெல்லாம் என்னை சொல்லாதே, இந்த மனிதர்களிடையே வாழ பிடிக்கவில்லை, பொய்யும், புனைவும், வஞ்சகமும், அப்பப்பா முடியவில்லை, எத்தனை நாள்தான் இவர்களுடன் போராடுவது, அதுதான் முடிவு செய்து விட்டேன்.
அப்படியானால் நீ இதுவரை நேர்மையாக மனிதர்களிடையே பழகியிருக்கிறாயா?
எனக்கு நாற்பது வயதாகிறது, கிட்டதட்ட பாதி முதியவன், இத்தனை வருடங்கள் இந்த மனிதர்களிடையே ஓரளவுக்கு நேர்மையாக வாழ்ந்து பழகிய பின்புதான் இத்தகைய முடிவுக்கு வந்தேன்.
மீண்டும் பெரும் சிரிப்பு கடல் அலையிடமிருந்து கிளம்பியது
ஏன் சிரிக்கிறாய்? கோபமாய் கேட்டான்.
வெறும் நாற்பது வருடங்களுக்குள் உனக்கு இப்படி தோன்றிவிட்டதாய் புலம்புகிறாயே, உன் கழுத்தில் பதிந்திருக்கும் வாளின் வயது தெரியுமா?
கிட்டத்தட்ட ஆயிரத்து ஐனூற்றுக்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்னால் இந்த வாள் அவன் கையில் சுழன்று கொண்டிருந்தது. அவன் அப்பொழுது சந்திக்காத சூழ்ச்சிகளா? சண்டைகளா? அப்பொழுதும் உங்கள் மானிட வர்க்கம்தானே வாழ்ந்து கொண்டிருந்தது.
அவன் உன்னைப்போல என்னிடம் இவர்களுக்கு பயந்து ஓடி வந்தானா?
இதற்கும் அதற்கும் முடிச்சு போடாதே? அவன் அரசன், அது மட்டுமில்லை, இப்பொழுது நான் சந்தித்த பிரச்சினைகளை அவன் சந்தித்திருக்க முடியாது.
அப்படியானால் இதுவரை மனித வர்க்கமே சந்திக்காத சிக்கல்களை சந்தித்து விட்டாயா? சொல் பார்க்கலாம்.
அதாவது, சொல்ல ஆரம்பிக்கும் போது “இல்லையில்லை இது சந்தித்திருப்பார்கள்’ தனக்குள் பேசியபடி ஒவ்வொன்றாய் சொல்லி பார்த்தவன், கடைசியில் ஒப்புக் கொள்கிறேன், எனக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் நான் சந்தித்த சிக்கல்களை ஏற்கனவே சந்தித்திருக்கலாம்.
அப்புறம் ஏன் இப்படி ஒரு முடிவு? எல்லோரும் சந்திக்கும் சிக்கல்கள்தானே, தைரியமாய் சந்தித்து, பூமியில் வாழ்ந்து இருக்கும் வரை இருந்து விட்டு என் சகோதரர்கள் இருவரிடத்தில் யாராவது ஒருவரிடம் போய் சேரவேண்டியதுதானே.
சகோதரர்களா?
ஆம், மண்ணும் நெருப்பும்தான், இதில் ஏதாவது ஒன்றில், வாடகைக்கு கிடைத்த உன் உடம்பை கொடுத்து விட்டு போய் சேரவேண்டியதுதானே.
ஐயோ நான் உன்னிடம் வந்துவிட்டேனே? எப்படி போவது?
ஓரு உண்மையை புரிந்து கொள் மங்கோலியாவில் கிடக்கும் வாள் இங்கு எப்படி வந்தது?
அதானே..!
அதேதான்,உங்களுக்கு மட்டும்தான் எல்லைகள், கோடுகள் எல்லாம்.எங்களுக்கு இவைகள் என்றுமே கிடையாது, உலகத்தின் அனைத்து வாசல்களிலும் நாங்கள் சென்று வருவோம், இப்பொழுது பார், நீ கூட மலேசியாவில் கரையோரத்தில் கிடக்கிறாய்.
மலேசியாவா..! ஐயோ..
திடுக்கிட்டு விழித்தவன் ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் தடவி பார்க்க படுக்கை விரிப்பு தட்டுப்பட்டது. அப்படியானால்..நான் படுக்கையில்தான் படுத்திருக்கிறேன். இங்குதான் இருந்திருக்கிறேன்.
“செல்போன்” கிர்ரென்று ஒலித்தது.
இந்த நேரத்தில்..மணி பன்னெண்டுக்கு மேல இருக்குமா? பயத்துடன் போனை எடுத்து பார்க்க முக கண்ணாடி இல்லாததால் யார் அழைத்தது, என்று தெரியாமல் “ஹலோ” என்றான் உயிரில்லாமல்.
ஆறுச்சாமிதான பேசறது, குரல் முரட்டுத்தனமாய் இருந்தாலும், இவனுக்கு யார் பேசுவது என்று புரிந்தது.
ஆமாங்க முதலாளி,,சார்..பயத்துடன் இழுத்தான்.
நீதான பேசறது ? பயப்படாதே, அந்த டாகுமெண்ட் கிடைச்சிடுச்சு, அப்பாடி தப்பிச்சேன், இல்லேண்ணா எத்தனை கோடி போயிருக்கும்.
முதலாளி நிசமாத்தான் சொல்றீங்களா? கிடைச்சிடுச்சா
ஆமாப்பா, உன்னைய வேற கடிஞ்சு பேசிட்டேன், நீதான் அதை தொலைச்சுட் டேன்னு, ஆனா நான்தான் ஒரு போட்டோவுக்கு பின்னாடி யாருக்கும் தெரிய வேணாமுன்னு எடுத்து ஒளிச்சு வச்சிருந்திருக்கேன். இப்பத்தான் தூங்கிட்டு இருக்கும்போது ஞாபகம் வந்தது, எந்திரிச்சு போய் பார்த்தா இருந்துச்சு, சாரிப்பா, போய் நிம்மதியா தூங்கு.
எந்த போட்டோவுக்கு பின்னாடிங்க ஐயா?
அதாம்ப்பா “செங்கிஸ்கான்” படம் ஒண்ணை “பெரிய வாளை” இடுப்புல சொருகினாப்படி குதிரையில உட்கார்ந்திருப்பாரே, அந்த படம்தான். உள் ரூமுல பெரிசா மாட்டியிருப்போமில்லை, அதுலதான் பின்னாடி பத்திரமா வச்சிருந்திருக்கேன்.
அப்பாடி..கடவுளே இந்த டாகுமெண்ட்சை காணாமல் சுத்தி இருந்தவங்க எல்லாம் என் மீது பழியை போட்டு “இவன்கிட்டே தான் கொடுத்தீங்கன்னு” சாதிச்சு, அதைய நம்பி இந்த ஆளு என்னை போலீசுல கொண்டு போயிடுவேன்னு சொல்லி.
அதற்கு பின் ஏற்பட்ட நிம்மதியினால் கூட அவனுக்கு தூக்கம் வராமல், கொட்ட கொட்ட விழித்து கொண்டிருந்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Dec-22, 2:58 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kadal alaium avanum
பார்வை : 119

மேலே