ஒரு ஸ்பானிய எழுத்தாளன்

அன்பார்ந்த ரவிக்கு.

நீ நலமா? நலமாக இருப்பாய் என்று இப்போதும் நான் நம்புகிறேன். நம்பிக்கையின் வால்முனைதான் விதி என்று நீ அடிக்கடி சொல்வாய்.

நான் விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

உனக்கு இரண்டு கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.

இரண்டும் என் அலுவலக நண்பன் சுந்தரிடம் கொடுத்து உனக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

அவன் தவறாது உனக்கு அனுப்பி வைப்பான் என்று நம்புகிறேன். அப்படி இரண்டும் உனக்கு கிடைத்து விட்டால் நான் உயிரோடு இல்லை என்பதையும் அதை உனக்கு உடனடியாக தெரிவிக்க நமக்கு பொதுவான நண்பர்கள் யாரும் இல்லை என்றும் புரிந்து கொள்ளவும்.

வாசித்து கொண்டிருக்கும் இதுதான் முதல் கடிதம்.

கார்த்திகை மாதத்தில் ஒருநாள் நீ எனக்கு கடைசியாக எழுதிய கடிதம் கிடைத்தது.

மாயச்சதுரங்களுக்குள் நான் பதுங்கி இருக்கிறேன் என்ற முதல் வரியுடன் துவங்கிய கடிதம் அது.

நீ நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் நகுலன் படிக்கிறாய் என்பதை அந்த கடிதம் மூலம் அப்போது நான் புரிந்து கொண்டேன்.

நகுலனுக்கு மனதில் தென்பட்டு கண்களில் தென்படாத சுசீலா கோட் ஸ்டாண்டின் அருகில் நிச்சயமாய் இருக்க மாட்டாள். நீ சுசீலாவை பற்றி நகுலனிடம் உரையாட விரும்பி இருக்கலாம்.

என்னைப்பற்றி சொல்கிறேன்.

இப்போது நான் பணியின் காரணமாக வாழ வேண்டும் என்ற உக்கிரம் காரணமாக ஒவ்வொருவரும் மனம் லயித்து செய்யப்படும் தவறுகளும் குற்றங்களும் பெருகி இருக்கும் ஒரு நகரத்தின் மையத்தில் இருக்கிறேன்.

இருக்கிறேன் என்றால் இருக்கிறேன்தான். அதை வசிக்கிறேன் என்றோ வாழ்கிறேன் என்றோ சொல்ல முடியாது.

என்னை சுற்றிலும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அம்மனிதர்களை சுற்றிலும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் வாசனையான முகங்களை விற்று காதலை சம்பாதித்து அதில் காமத்தை கிண்டி கொள்கிறார்கள்.

உன் மாயச்சதுரங்கள் என்பது உனது கால்விரல்கள் கண்ட கனவை நீ அறிந்து கொண்ட தினத்தில் இருந்து உனக்கு சம்பவிக்க ஆரம்பித்ததென்று நானாக யூகம் செய்து கொள்கிறேன்.

அது உண்மையெனில் இனி நான் சொல்லப்போவதையும் பொய் அல்லது புரட்டில்லை என்பதாகவும் நீ எடுத்து கொள்ள வேண்டும்.

அன்பான ரவி...

வாழ இங்கே வந்தபிறகு ஒருநாள்...

நகரம் ஒப்பில்லா அமைதியுடன் அப்போது எனக்காக காத்திருந்தது. நான் பாயை சுருட்டி வைத்து அநாதையைப்போல் தங்கி இருந்த மேன்ஷன் அறையை விட்டு வெளியில் வந்தேன். நான்கு அடுக்கு மாடியில் நான் மூன்றாம் தளத்தில் 367ம் அறையில் இருந்தேன்.

ஒரு சிறிய அறை. அதில் என்னையும் சேர்த்து மூன்று நபர்கள். ஆளுக்கொரு மூலையில் பதுங்கி தூங்கிவிட்டு பின் காலையில் வேலைக்கு செல்ல ஒரு வாரத்தில் அதுவே பழகிவிடும்.

அழுகிய மாமிச வாடை பெருகி வீசி கொண்டிருந்த ஒரு இரவில் நான் திடுக்கிட்டு விழித்து கொண்டேன்.

நகரம் நீ என்னை எரிப்பாயா? உன்னால் அது முடியுமெனில் நான் உதவுகிறேன் என்று என்னிடம் ஆசை காட்டியது.

நகரத்தின் கைகளும் கால்களும் காய்ந்த விறகினை போல் மஞ்சள் நிறம் பாரித்து முதிய அரக்கனை போல் சிக்கலான மூச்சை பொருமி பொருமி வெளியிட்டது. புகையாய் பரவியது.

அதன் வயிற்றில் நிறைய அரங்கங்கள் இருந்தன. குளிர் வசதி செய்யப்பட்டும் செய்யப்படாததுமான பல வண்ண வண்ண அரங்கங்கள்.

அதில் கலைஞர்களும் வணிகர்களும் புகைத்தபடியும் விரும்பிய பெண்களை சல்லாபித்தபடி நரம்பு தளர்ச்சியுடன் உழைத்து கொண்டிருந்தனர்.

அவர்கள் ஒருவரை ஒருவர் விஞ்சும் நோக்கத்தில் பணத்தால் அதிகாரங்களை வளர்த்து கொண்டும் அளவளாவிக்கொண்டும் இருந்தனர்.

நண்பா ரவி,

ஸ்பானிய படைப்பாளி Julio Llamazares பற்றி நீ முன்பே அறிந்திருப்பாய்.

அவரின் மஞ்சள் மழை படித்திருக்க வேண்டிய ஆள் நீ. அல்லது அதை நீ ஒரு பயணத்தில் படித்தும் இருக்கலாம்.

அந்த நாவலை நேற்று வாங்கினேன்.

அதன் முன் அத்தியாயங்களை மறுபடி வாசிக்க விரும்பி தனிமையானேன்.

நாவல் வாசிப்பின் சில கணங்களில் நான் முற்றும் தொலைந்து போனேன்.

என்ன நிகழ்ந்ததோ அதை பிசகின்றி சொல்ல தயார் ரவி. ஆனால் உன்னால் அதை நம்ப முடியுமா?

அறையிலிருந்து வெளியேறிய கணம் முதல் நான் சாலையோர போஸ்டர்கள் முன் சுயமைதுனம் செய்பவனாக, நிலவின் சாபம் பெற்று அதன் ஒளியில் நடுங்குபவனாக மாறி இருந்தேன்.

நான் அறையில் இருந்து வெளியேறியது உண்மை. ஆனால் நான் உடல் அளவில் வெளியேறவில்லை.

அப்போது என் சக அறைவாசி ஒருவன் நான் காய்ச்சலில் இருந்து பிறருக்கு தொந்தரவு செய்து வருவதாகவும், கண்டபடி பிதற்றி இரவில் மெலிதாக ஊளையிடுவதாகவும் மேன்ஷனின் கிழட்டு வாட்ச்மேனிடம் நிறைய குற்றங்கள் அடுக்கி சொல்லி கொண்டிருந்தான்.

என்னிடமோ கண்களுக்கு தெரியாதபடி ஏதேதோ வார்த்தைகள் கொட்டி கொண்டே இருந்தன. அவை என்னை நனைத்தன.

அறைக்குள் நான் மிகுந்த துன்பத்தில் தன் உணர்வற்று வெப்பத்துடன் அலைவதாகவும் உடைகளில் விந்து ஸ்கலிதமாகி காலண்டரில் இருக்கும் ஸ்வாமி படங்களை தொடர்ந்து அவமானம் செய்து வருவதாகவும் அவன் பொறுமிக்கொண்டு இருந்தான்.

அப்போது என் நிலைமையை புரிய வைக்க வேறு வழியின்றி இவைகளை நான் உணர்ந்தும் உணராமலும் விட்டம் வெறித்து பார்த்தபடி இருந்தேன்.

பக்கத்து அறையில் இருக்கும் கொல்லத்தை சேர்ந்த ஒரு மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ் என்னை உற்று பார்த்து நான் சூனியம் அல்லது பில்லியால் பாதிக்கப்பட்ட மனிதன் என்று மேன்ஷன் முழுக்க அறிவிக்க ஆரம்பித்தான்.

ரவி...

அவர்கள் ஒருநாள் என்னை விரட்டி அனுப்பினர்.

நான் அன்று நள்ளிரவில் அங்கிருந்து அறையை காலி செய்து விட்டு நகரத்தில் வேறு இடம் பார்க்க நேர்ந்தது.

🎥🎥🎥🎥🎥

இரவில் கொட்டும் மழையில் நகரத்தின் இன்னொரு மூலைப்பகுதிக்குள் ரயில் இழுத்து கொண்டு போனது.

அது உதிர்த்த இடத்தில் இருந்து ஓரிரு தெருக்கள் தாண்டி விசாரித்தேன். வீடு போல் இருந்த அந்த அறையில் வடக்கு மூலையில் ஒரு அறையை மனமிரங்கி எனக்கு தங்குவதற்கு தந்தார்கள்.

அந்த குடியிருப்பில் இன்னொரு ஒண்டு குடித்தனத்தில் கனகவள்ளியை ஒருநாள் நான் பார்த்தேன்.

நீ இப்போது கடும் தகிப்பு கொள்வாய் என்பது நன்கு புரிகிறது. சொல்கிறேன்.

📽️📽️📽️📽️📽️

ரவி...

இருப்பிடம் மாறினாலும் நகரம் என்னை ஒவ்வொரு இரவும் பணிக்க துவங்கியது. அது என்னை இஷ்டம் போல மேய்க்கவும் அடிமைப்படுத்தவும் ஆரம்பித்தது.

வாய்ப்பு கிடைத்த ஒட்டகம் கூடாரத்தின் உள்ளே தலை நீட்டி வாய் பிளந்து சிரிப்பதை போல் எனக்குள் அது ஏதேதோ அலங்கோலத்தை வரைந்தது.

உனக்கு நம் பால்யம் நினைவிருக்கிறதா?

இளமை அரும்பிய பருவத்தில் நாம் கனகவள்ளியை பற்றி நிறைய பேசி இருக்கிறோம்.

அவள் ஸ்தனங்கள் நாளுக்கு நாள் பார்ப்பவரை ஹிம்சை செய்யும்படி பெருகி வளர்வது குறித்து ஒரே மாதிரியான கனவுகள் நாம் கண்டிருக்கிறோம்.

அன்று, நம் இளமை ஒரு பிசாசாய் மாற்றம் கொண்டு நம்மை விரட்டி கொண்டே இருந்தது. இளமை ஒரு சாபத்தின் புயல் வடிவம். அது முடுக்கி விடுவது விதியின் கோரைப்பற்களை என்று நீ சொல்லி கொண்டே இருப்பாய்.

நம் ஊரில் ஒருநாள் கனகவள்ளி அம்பலகாரரின் கிணற்றில் மிதந்தாள்.

என்ன விசாரித்தும் காரணம் தெரியவில்லை. போலீஸ் அறியாதபடி அவளை அவள் உறவும் ஊரும் சேர்ந்து எரித்து தலை முழுகி மறந்தது.

நாம் இருவரும் மரத்து போய் இருந்தோம். மாங்கொல்லையில் சன்னாசியோடு கஞ்சா புகைத்தும் அவள் நினைவுகள் நம்மிடமிருந்து போகவில்லை.

ஒருநாள் இரவில் நிலா என்னை சபிக்கிறது என்று என்னிடம் கூறினாய். உன் ஆண்குறி மீது அளவு கடந்த வெறுப்பு உருவாகி வருவதாக கூறினாய்.

வெர்ஜினியா வுல்ஃப் ஆவிதான் நமது கனகவள்ளியை அழைத்து சென்று விட்டது என்று புலம்பினாய்.

பசி என் வயிற்றை கிள்ளியபோது நான் நகரத்துக்கு வந்தேன். நீயோ இன்னும் அங்கிருக்கிறாய். அதே கிராமத்தில். அதே மாங்கொல்லையில்.

பின், கனகவள்ளி எப்படி உயிரோடு? இது என்ன சாத்தியம்?

நீ யோசிக்கிறாயா அல்லது குழப்பத்தில் தவிக்கிறாயா என்று நான் யோசிக்கிறேன். அந்த யோசனைகள் எனக்கும் உண்டு. ஆகவே ஒரு ஓய்வு கொள்ள இத்தோடு முதல் கடிதத்தை முடித்து கொள்கிறேன்.

🎬🎬🎬🎬🎬🎬

அன்பார்ந்த ரவி,

இது இரண்டாவது கடிதம். நான்கு நாள் இடைவெளியில் எழுதுகிறேன்.

இப்போது நான் பணியில் முன்பை விட மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் இருப்பதாக நண்பர்கள் சொல்கின்றனர்.

இது எல்லாம் கனகவள்ளியை பார்த்த பின்தான். இன்னும் அவளோடு நான் பேசவில்லை. கனகவள்ளியின் தோற்ற வடிவில் இருக்கும் அவள் யார் என்பதும் மற்ற எந்த விபரமும் எனக்கு தெரியாது.

அவள் உருவம் கொண்ட அல்லது அவள் ஜாடையில் இருக்கும் வேறு ஒரு பெண் என்பதை அறிவுப்பூர்வமாக அறிவியல்பூர்வமாக நான் நம்பியே ஆக வேண்டும்.

ஆனால் உண்மை என்பது அதுவல்ல இனி உனக்கு தெரியும்.

சற்று கவனமாக படிக்கவும்.

🔍🔍🔍🔍🔍

பணியில் நான் சிறப்புற்று இருந்தாலும் என் தொல்மனது இன்னும் அப்படியே இருக்கிறது. இந்த நகரத்துக்கும் எனக்குமான சிடுக்கு மிகுந்த உறவு பெருகி கொண்டே இருந்தது. இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு ஊதாப்பூவை போல் நான் வாழ்ந்து வருகிறேன்.

நகரம் இப்போதும் என்னை பாடாய் படுத்தி கொண்டிருந்தது. அப்படித்தான் ஒரு இரவில் மழை மஞ்சள் நிறத்தில் பெய்ய ஆரம்பித்தது. அது பருவ மாற்றம் அல்லது சுற்றுச்சூழல் பிசகின் கோளாறு என்று நினைத்தேன்.

நகரம் மனம் நிறைய வன்மத்துடன் கண்களை குறுக்கி சூன்யக்காரி போல் என்னை வெறித்து பார்த்தது. அது முணுமுணுத்த கருப்பு மொழியில் இனி நான் இனி அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியது.

ஆனாலும் நான் எனது மரணத்தை பரவசத்துடன் ஆராதிக்க முடிவு செய்தேன். என் நரம்புகளில் சின்ன அதிர்வுகள் முழக்கம் செய்தபடி இருந்தன. கண் இமைகள் வெட்டி கொள்ள ஆரம்பித்தன.

மரணத்துக்கு முன் மஞ்சள் மழை நாவலில் கடைசி வரிகளையேனும் படித்து விடவேண்டும் என்று ஆவல்.

நகரம் ஒரு சுருக்கு கயிறு. சரியான இடத்தில் சரியான கோணத்தில் என் கழுத்தில் அமர்ந்து கொண்டது.

ஆத்மாநாமின் நகரத்தை எரிப்போம் வா என்ற கவிதையை மந்திரம் போல் மனம் பாட துவங்கியது. உடலுக்குள் ஒரு மாய தோட்டா வெகுவேகமாக துளைத்து சுற்றி சுற்றி குடைந்தபடி பயணித்தது.

இரவு செதில் செதிலாக பிய்ந்து நின்றது.

யாரோ என்னை மெல்ல வருடி விட்டது போல் ஓர் உணர்வு.

கனகவள்ளி அருகில் நின்றிருந்தாள்.

நான் அவளை வெறித்து பார்த்தேன்.

குவளை நிறைய நீர் கொடுத்தாள்.

அதை அத்தனையும் அவசரமாய் பருகினேன். அது போன்ற கசப்பை வாசனையை நான் முன்பு சுவைத்தோ உணர்ந்தோ இல்லை.

அமைதியை முள் தைத்து வைத்தது போன்ற ஒரு கனமான அறையாக இருந்தது நான் இருந்த அறை. ஒரு காந்தத்துக்குள் அடைபட்ட உணர்வு.

அவள் புத்தக அலமாரிக்கு அருகில் சென்று மௌனியின் சிறுகதைகளை தன் கையில் எடுத்து கொண்டாள். சற்று புன்னகைத்து விட்டு பக்கங்கள் புரட்டி மனதுக்குள் எந்த கதையையோ வாசிக்க ஆரம்பித்தாள்.

அது அழியாச்சுடர் என்று இன்னும் நம்ப விரும்புகிறேன். ஆழ்ந்த மூச்சை விடுத்து புத்தகத்தை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

என்னை கூர்ந்து பார்த்தாள்.

தயங்கி அவளிடம் நான் புன்னகை செய்தபடி "எந்த ஊர் நீங்க, உங்க பேர் என்ன... என்றேன்".

ம்ம்ம்... என் அப்பா பேரு ரவி என்றாள்.

📼📼📼📼📼

எழுதியவர் : ஸ்பரிசன் (18-Dec-22, 4:45 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 242

மேலே