துறவியின் தூய்மையும் பெருமையும் – அறநெறிச்சாரம் 210

நேரிசை வெண்பா

முப்பெயர் மூன்றும் உடன்கூட்டி ஓரிடத்துத்
தப்பிய பின்றைதம் பேரொழித்(து) - அப்பால்
பெறுபெயரைக் காயப் பெறுபவேல் வையத்(து)
உறுமவனை எல்லாம் ஒருங்கு 210

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மூன்றாகப் பெயர்பெற்ற உலக மூடம், பாசண்டி மூடம், தெய்வ மூடம் என்ற மூன்றனையும் ஒன்று சேர்த்து அமைதியான ஓரிடத்திலே அமர்ந்து ஆலோசித்து அம் மூன்றையும் ஒழித்து விலக்கிய பிறகு, தம் ஆணவமாகிய பெயரினையும் விலக்கி, துறவு நிலைக்குப் பின் பெறக்கடவதாகிய தூயோன் என்ற புகழ்ச் சொல்லையும் வெறுக்க மக்கள் பெறுவார்களேயாயின்,

இவ்வுலகத்திலே அவ்விதம் பெற்ற அப் பெரியோனை எல்லாப் பொருளும் ஒன்றாக அடையும்.

குறிப்பு:

துறவிகளுக்குத் தம்பெயர் கூறலும், கூடாவாகலின் பேரொழித்தல் கூறப்பட்டது; பேர் கூறல் "நான்" எனும் நினைவு தலைப்படுதலாமென்பது சான்றோர் கருத்தாதலின், "ஆணவமாகிய பெயர்" எனக் கண்ணழிக்கப்பட்டது என்க.

இங்ஙனம் உயர்ந்த துறவு நிலைபெறுதல் ஆயிரத்தொருவர்க்கே கூடுமாதலின், "பெறுபவேல்" எனப் பலர்பாலற் சொற்கொண்டு தொடங்கி "அவனை" என ஆண்பாற் சொல்லால் முடிக்கலாயினர்! இது சிறப்புக் கருதி வந்த வழுவமைதி என்க!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-22, 11:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே