பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின் உழையினியர் ஆகுவர் சான்றோர் – நாலடியார் 349

நேரிசை வெண்பா

பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர் 349

- கீழ்மை, நாலடியார்

பொருளுரை:

தேன் சொரியும் நெய்தல் மலர்களையுடைய ஒலிக்கின்ற கடலின் குளிர்ந்த கரையை உடையவனே!

தமக்குப் பின்னால் வந்து ஒருவர் பணிவுடையராய் நின்றால் இவர் பலநாள் பழகியவரென்று விரும்பி அவரிடம் சான்றோர் அன்புடையவர் ஆவர்;

ஆனாற் கீழ்மக்கள் அவரைத் தமக்கு அடங்கினவரெனக் கொண்டு அன்புடன் விரும்பாமல் அதிகாரத்தால் மதியாது ஒதுக்குவர்.

கருத்து:

தம்மை விரும்புவோரைத் தாம் மதியாது ஒதுக்குவது கீழ்மக்களின் இயல்பு.

விளக்கம்:

பின் நிற்றல் ஈண்டுப் பணிவுடையராய் இருத்தல் உணர்த்திற்று; ‘பின்நின்றபின் இவர் பன்னாட் பழையரென்று சான்றோர் உழை இனியர் ஆகுவர்' என்று கொள்க.

உழை, அவருழை யென்க.விழையாதே என்னும் குறிப்பானும், பின் நிற்பின் என்னும் குறிப்பானும், எள்ளுதல் அதிகாரத்தானென்பது பெறப்படும்.

கீழாயவர் என்பதில் ஆய்வரென்பது ஆக்க மன்று; நூலானது என்புழிப்போல வினை முதற் குறிப்பிடைச் சொல்; அதனை எழுவாய்ச் சொல்லுருபு என்ப; "வேற்றுமைப்பொருள்வயின்"1 என்பதற்குச்சேனாவரையர் உரைத்த உரை காண்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-22, 6:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே