நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது - நாலடியார் 352

நேரிசை வெண்பா
(’ல்’ ‘ர்’ இடையின ஆசு, க கி இடையின எதுகை)

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை: - வழும்பில்சீர்
நூ’ல்’கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தே’ர்’கிற்கும் பெற்றி அரிது 352

- கயமை, நாலடியார்

பொருளுரை:

நீர் நிறைந்த பெரியகுளத்தில் உயிர் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளும் ஆற்றலில்லாதனவாகும்;

அது போல,பிழையற்ற சிறப்பினையுடைய நூல்களைப் பயின்றாலும் நுட்பஞ் சிறிது மில்லாதவர் தம்மை அதனால் மேம்படுத்திக் கொள்ளும் மாட்சி இல்லை.

கருத்து:

அறிவு உரமில்லாதவர், தக்க வாய்ப்புக்கள் இருந்தாலும் தம்மை மேம்படுத்திக் கொள்ள அறியார்.

விளக்கம்:

பொய்கைக்குச் செழுமை நீரின் நிறைவு. உரமுள்ள அறிவு நுணுக்கம் பெறும் ஆற்றலுடையதாகலின், நுட்பமில்லா அறிவென்பது மெலிந்த அறிவினையுணர்த்தும்;

ஆதலின் ஈண்டு நுணுக்கமில்லாதரென்றது, கயவரை யென்க. தேர்தல், தகுதி பெறுதல்; மாட்சிமைப்படுத்திக் கொள்ளலென்பது. அருமை இன்மை மேற்று;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-22, 7:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே