வருத்தாது கொண்டாரும் போலாதே கோடல் அது வண்டூதாது உண்டு விடல் - பழமொழி நானூறு 242

நேரிசை வெண்பா

பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
வண்டூதா(து) உண்டு விடல். 242

- பழமொழி நானூறு

பொருளுரை:

அரசனுக்குரிய இலக்கணங்கள் நீங்காத அழகிய குளிர்ந்த மாலையை உடைய அரசர்கள்

இறைப்பொருளுக்காக தன்னடியின் கீழ் வாழும் குடிகளை (மழையின்மை முதலிய காரணங்களால் பொருளில்லாத காலத்து) வருத்துதலைச் செய்யாமலும்,

பொருளுள்ள காலத்து வருத்திக் கொண்டவரைப் போலவும் கொள்ளாது எளிதாகக் கொள்ளுதலுமாகிய காலமறிந்து கொள்ளுதல் வண்டுகள் (மொட்டாகிய தேனில்லாத பூக்களை மலராத காலத்து) ஊதிச் சிதையாது தேன் நிறைந்து மலர்ந்த காலத்துத் தேனை எளிதாக உண்ணுமாற்றை ஒக்கும்.

கருத்து:

அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குக.

விளக்கம்:

பொருத்தம் என்பன இறைமாட்சியுள் கூறப்பட்டனவேயாம். பொருளில்லாத பொழுது வருத்துதலிற் பயனில்லை யாதலின் வருத்தாது என்றும், பொருள் உள்ள பொழுது வருத்திப் பெற வேண்டியது இல்லையாதலின் எளிதாகக் கொள்க என்பார், 'கொண்டாரும் போலாதே கோடல்' என்றுங் கூறினார்.

பொருளில்லாத காலத்து இறைப் பொருளைக் குறைத்தோ, நீக்குதலோ செய்க என்பதாம். நால்வகை உவமையும் விரித்தற்கு ஏலாமையின் இடைச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சமன்மை அறிக.

அஃது ஆகாதே என்னும் எதிர்மறை வினையெச்சத்தோடு புணர்ந்து நிலைமொழி அகரமும் வருமொழியின் இடையிலுள்ள உயிர்மெய்யும் கெட்டுப் போலாதே என நின்றது.

'வண்டூதாது உண்டு விடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-22, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே