தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல் போத்தறார் புல்லறிவி னார் - நாலடியார் 351

நேரிசை வெண்பா
('ர்’ இடையின ஆசு)

ஆ’ர்’த்த அறிவினர் ஆண்டிளைய ராயினுங்
காத்தோம்பித் தம்மை அடங்குப; - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார் 351

- கயமை, நாலடியார்

பொருளுரை:

உறுதிமக்க மெய்யறிவினை உடையவர்கள் வயதில் இளையராயினும் தம்மைத் தீய நெறியினின்று காப்பாற்றி நன்னெறியில் நிறுத்தி அடக்கிக் கொள்வர்;

ஆனால் மெலிந்த அறிவினையுடையார் கழுபோல முதிர முதிரத் தீயசெய்கைகளே தடிப்பேறி அலைந்து மாசு நீங்கார்.

கருத்து:

ஆண்டு முதிர்ந்து உலகப்பழக்கம் ஏறுதலால் கயவர் பெறும் பயன் யாதுமில்லை.

விளக்கம்:

ஆர்த்தவென்பது காழ்ந்தவென்னும் பொருட்டு. ‘காத்து ஓம்பி அடக்குப' என்பதற்குப் புலன் நெறியிற் காத்து ஞானநெறியில் ஓம்பி அருளில் தம்மை அடக்கியொழுகுவர் என்க.

மூத்தொறும் என்றார், மூத்தலிற் பயனில்லாமையின். எருவை, மேலுமேலும் பிணத்தையே உகத்தலைதப் போல் தீயனவே விரும்பியலைவர் என்பது. போத்தென்றது புரை: ஆவது, குற்றம்.

கயமை ஈண்டு மென்மையாகலின்1 மெலிந்த அறிவினார் புல்லறிவினார் எனப்பட்டனர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-22, 6:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே