நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும் கல்வியென் தோழன் - அறநெறிச் சாரம் 212
நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு) (’ச்’ எதுகை)
நல்லறம் எந்தை; நிறையெம்மை; நன்குணரும்
கல்வியென் தோழன்; துணிவெம்பி; - அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ! பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு 212
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
நல்லறமே என் தந்தை, மன அடக்கமுடன் கூடிய அறிவே என்தாய், நன்மையை யுணர்தற்குக் காரணமாய கல்வியே என்னுடைய தோழன், மனத்தெளிவே என்னுடைய தம்பி,
உறுதிபயக்கும் இச்சுற்றத்தார் போல எனக்கு இவையில்லாத தந்தை தாய் தோழன் உடன் பிறந்தவர்களாகிய பொய்ச்சுற்றத்தார் உறுதி பயப்பரோ? பயவார் என உணர்த்தப்படுகிறது.
குறிப்பு: நிறை - மனவடக்க மெனினுமாம்.