தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார் பரியார் இடைப்புகார் - பழமொழி நானூறு 244
இன்னிசை வெண்பா
தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார் மன்ற
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
அரிவாரைக் காட்டார் நரி. 244
- பழமொழி நானூறு
பொருளுரை:
பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே!
நெல்லரிவோர்களுக்கு அவ்வேலை கெடும்படி நரியைக் காண்பியார்;
அதுபோல, ஆராய்ச்சி உடையாருடன் ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார் நுண்ணறிவு இல்லாரிடம், அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான், செல்லார்.
கருத்து:
அறிவுடையார் தம் போன்றாரை அறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.
:
விளக்கம்
அறிவிலார் குணங்களை அறிவாராதலால் அவரைக் காட்டி வீணே காலங்கடத்தித் தம் வேலையைக் கெட்டொழியார் என்பதாம்; தெரிதல் - உண்மையை ஆராய்தல், தெரிவு - உண்மையை அறியும் அறிவு (ஆராய்ச்சி),
'அரிவாரைக் காட்டார் நரி' - இஃது இச்செய்யுளில் வந்த பழமொழி.