157 முறைகடந்து புணர்வோரை முழுமுதல் தண்டிக்கும் – பரத்தமை 1

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
காய் வருமிடத்தில் விளம் வரலாம்.

பண்டோராண் பெண்ணமைத்தவ் விருவருக்கு மணமியற்றிப்
..பரனி ரக்கங்
கொண்டளித்த முறைகடந்து கள்ளவழிப் புணர்ச்சிசெயுங்
..கொடியோர் தம்மை
மண்டலமே வாய்பிளந்து விழுங்காயோ அவர்தலைமேல்
..வானு லாவுங்
கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ விதுசெய்யில்
..குற்ற முண்டோ. 1

– பரத்தமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”முதன்முதலில் ஒரு ஆண் பெண் இருவரையும் அமைத்து, அவ்விருவருக்கும் ஆண்டவன் இரக்கங் கொண்டு மணம் செய்வித்தான்.

நிலமே! அம் மணமுறையைக் கடந்து தீய வழியாகக் கூடி இன்பமடையும் கொடியவர்களை வாய்பிளந்து விழுங்க மாட்டாயா!

வானில் திரியும் மேகமே! அவர் தலைமேல் பெரிய இடியை விழச் செய்யமாட்டாயா! இப்படிச் செய்யின் ஏதேனுங் குற்றமுண்டோ?” என்றும் கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

பண்டு – முதன் முதலில். பரன் - கடவுள்.
மண்டலம் - நிலம். உலாவல் - திரிதல். கொண்டல் - மேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-22, 8:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே