பன்றி செயிர்வேழ மாகுத லின்று - நாலடியார் 358

நேரிசை வெண்பா

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய்; பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.358

- கயமை, நாலடியார்

பொருளுரை:

உயர்குடியிற் பிறந்த சான்றோர் பொருளில்லாமை முதலியவற்றால் தளர்வுண்டான காலத்திலும் செய்யும் நற்செயல்களை, கயவர்கள் செல்வமுள்ள காலத்திலும் செய்ய மாட்டார்கள்.

ஒளிமிக்க கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண் கட்டினும், அது போர்ச்சினமுடைய யானையாக ஆகுவதில்லை.

ஏட்டை - தளர்வு: செறிப்பினும் - செறித்துக் கட்டினும், மோடு - செல்வவுயர்வு.

கருத்து: நல்லன செய்தல் கயவர் இயல்பன்று.

விளக்கம்:

அறஞ்செய்தல் பிறவி இயல்பென்பதால் இற்பிறந்தார் எனப்படுகிறது. இழிவு கருதியும், உருவம் ஏனை அறிஞரை ஒப்ப முழுதும் ஒத்திருப்பது கருதியும், அறிவு முதலிய உயிர் வளர்ச்சியின்றிப் பிறந்த வடிவாக விளங்குதல் கருதியும் மூடர் ‘முழுமக்க' ளெனப்பட்டனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-23, 1:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே