68 அடக்க மிலாதவர் ஆசிரியர் ஆகார் - பொய்க்குருவின் தன்மை 4
கலி விருத்தம்
பழிதீர் கலையாவும் உணர்ந்தும் பலர்க்குரைத்தும்
இழிவே யுறத்தாம் அடங்காமதி யீனரார்க்கும்
வழிகாட் டிடநாட்டு மரத்தையும் வையமேச
விழியற் றவன்கையினில் வைத்த விளக்குநேர்வார். 4
- பொய்க்குருவின் தன்மை, நீதிநூல்
-மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”குற்றமில்லாத நூல்கள் அனைத்தும் கற்றும் பிறர்க்கு கற்பித்தும், தன்னடக்கமில்லாத அறிவில்லாதவர்க்கு அது இழிவேயாகும். அத்தகைய அறிவிலாரை யாரும் ஆசானாகக் கொள்ளார்; கொண்டால், வழி காட்டி மரம் நின்ற இடத்தே நிற்பது போலவும், உலகத்தார் ஏசும்படி குருடன் கையில் விளக்கு ஏத்திக் கொடுப்பது போலவும் பயனில்லை” என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
மதியீனர் - அறிவிலார்.