495 பொல்லாங்கு உருவே பொதுமகள் உருவம் – கணிகையரியல்பு 22
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
வடிவுமிகு கொழுநர்தமை வேசியர்வவ் விடவருந்தும்
..வாட்கண் நல்லீர்
கடினமனங் கணக்கிலா ஆடவர்சம் போகமுயிர்
..கவர்தல் வஞ்சங்
குடிகெடுக்குந் தொழிலுங்கட் கில்லையென வெறுத்தனரக்
..குணங்க ளெல்லாம்
படியிலுமக் கமையுமேற் கணவர்திரு வருளுமக்கும்
..பலிக்கு மன்றே. 22
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
அழகு மிக்க கணவர் நம்மை வெறுத்துப் பொதுமகளை விரும்பி அவளுக்கே அடிமையாகி விட்டனரே என்று வருந்தும் ஒளிமிக்க கண்ணையுடைய மாதரே!
உங்கட்கும் அப் பொது மகள் பாலுள்ள வன்கண்மையும், அளவிலாத ஆடவர் இணக்கமும், உயிர் கொல்லுதலும், ஏமாற்றுதலும், குடும்பத்தைக் கெடுக்குங் கொடுந்தொழிலும் அமையுமானால் கணவர் திருவருள் உங்களுக்குக் கைகூடும். (பொதுமக்கள்பால் உண்டாம் தீக்குணங்கள் இவை எனக் குறித்தபடி. குலமகட்கு வேண்டுமென்பதன்று)
சம்போகம் - இணக்கம். படியில் - உலகில். பலிக்கும் - கைகூடும்.