251 வழக்கிடாது மனமொத்துப் பங்கிடல் மாண்பு – கைக்கூலி 7
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
எனதுன தெனவொரு பொருட்கி ரண்டுபேர்
சினமொடு வாதித்தோர் தீயன் பாற்செலின்
தனதென அப்பொருள் தனைக்கொள் வானவர்
மனதொரு மித்ததை வகிர்தன் மாண்பரோ. 7
- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”என்னுடையது உன்னுடையது என்று ஒரு பொருளுக்காக இருவர் கோபம் கொண்டு வாதம் செய்து, அதை முடிவு செய்ய வழக்காக ஒரு தீயவனிடம் சென்றால், அவன் அப் பொருளைத் தனதெனச் சொல்லிப் பிடுங்கிக் கொள்வான். அதனால், இருவரும் தமக்குள் மனமொத்து அப்பொருளைப் பங்கிட்டுக் கொள்வதே அறிவுடைய செயலாகும்” என்று இப்பாடலாசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
வாதித்தல் - வழக்கிடல். வகிர்தல் - பங்கிடல். மாண்பு – நன்மை, அறிவுடைமை.