568 கருவியின்றியே கடவுள் காண்பன் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 26
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
கண்ணிணை செவிக ளீந்தோன்
..காணான்கொல் கேளான் கொன்னெஞ்
செண்ணிய வீந்தோ னந்தீ(து)
..எண்ணான்கொல் செங்கோ லோச்சுந்
திண்ணியன் றண்டி யான்கொல்
..தீதிலான் தீதைச் சீறா(து)
அண்ணிடு வான்கொ னெஞ்சே
..அவனடி வழிப டாயே. 26
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் தந்த கடவுள் அவையின்றியே தான் காணவும் கேட்கவும் வல்லன். அளவிலாத எண்ணங்களை அடக்கி வைத்து வேண்டும் போது வேண்டுவ வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த நெஞ்சையருளிய கடவுள், நாம் எண்ணும் தீய எண்ணங்களைத் தம் திருவுள்ளத்து அவ்வப்பொழுதே காணவும் வல்லன்.
செங்கோல் மன்னன் குற்றம் புரிந்தவர்களை ஒறுத்து அடக்காது ஒழியான். ஒழுக்கங் குன்றா விழுப்பஞ்சேர் சான்றோர் தீயோரைக் கண்டால் கடிந்து அகலாது நெருங்கி உறவு கொள்ளார்.
அதுபோல், நன்மைக்கு இன்பமும் தீமைக்குத் துன்பமும் தந்தருள்பவன் கடவுள். ஆயின், அவனை வல்விரைந்து தொழுவாயாக.
சீறான் - சினவான். அண்ணிடுவான் - நெருங்குவான்.