மயக்கவுணர்வால் வரும் துன்பங்கள் – அறநெறிச்சாரம் 215

நேரிசை வெண்பா

தேற்றமில் லாத ஒருவனைப் பின்னின்றாங்(கு)
ஆற்ற நலிவர் இருநால்வர்; - ஆற்றவும்
நல்லார்போல் ஐவர் பகைவளர்ப்பர்; மூவரால்
செல்லும் அவன்பின் சிறந்து 215

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

உண்மைப்பொருளின் தன்மை இதுவெனத் தெளியாத ஒருவனை அப்பிரத்தியாக்கியான குரோதம் முதலிய எட்டும் பின்பற்றி மிக மெலிவிக்கும்;

மெய் முதலிய பொறிகள் ஐந்தும் இன்பம் பயப்பன போன்று மிக்க துன்பத்தையே வளர்க்கும், ஐவளி பித்து என்னும் மூன்றன் மாறுபட்டால் அவன் பின் மரணமடைவான்.

குறிப்பு:

"இரு நால்வர்" என்றது எண்வினையை. அவை அப்பிரத்தியாக்கியான குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம்,

பிரத்தியாக்கியான குரோதம்-பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்பன.

"பின் சிறந்து செல்லும்" என்பது மங்கல வழக்கு; இதனால் உண்மை யுணர்வில் வழி வருவதோர் இழுக்குக் கூறப்பட்டது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 8:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே