உழவர் கலப்பை இன்றிக் குலுங்காது பணப்பை

நாம் பிறந்து வருடங்கள் பல சிறகடித்துப் பறந்தது
இந்த இடைவெளியில் பல பண்டிகைகள் பிறந்தது
சித்திரைகள் பல சிறப்பு முத்திரைகளைப் பதித்தது
ஆடித்திருநாட்கள் பலர் வாழ்வினைச் சிறப்பித்தது!

தெய்வீக நவராத்திரி பூசைகள் பக்தியை ஊட்டியது
வண்ண தீபாவளிகள் நட்பின் ஒளியைக் கூட்டியது
மார்கழிப் பாசுரங்கள் இறைபக்தியை சீர்படுத்தியது
இந்நிகழ்வுகள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தியது!

மேற்கூறிய பண்டிகைகள் அனைவருக்கும் சார்ந்தது
ஆனால் ஒரு திருவிழா விவசாயிகளையே சேர்ந்தது
நிலம் நீர் ஞாயிறு இந்நாளுக்கு மூலமாக அமைந்தது
தைப்பொங்கல் குடியானவர்கள் தினமாக மலர்ந்தது!

கதிரவன் ஒளிபட்டு, மனிதனுடன் பயிரும் வளர்கிறது
ஞாயிறுதான் கடல்நீர் மூலம் பூமிக்கு மழை தருகிறது
சூரியனே நம்முடன், இயற்கையையும் பாதுகாக்கிறது
உழவர்கள் உழைப்பில் உணவுப்பயிர்கள் உருவாகிறது

நெல் தரும் அரிசியே மக்களின் அத்தியாவசிய உணவு
சூரியனுக்கு நன்றி கூறுவது உழவர் மக்களின் உணர்வு
இத்தகைய உயர்ந்த குடியானவர்கள் என்றும் நம் உறவு
விவசாயிகளின்றி நமக்கும் இல்லை வாழ்வில் உயர்வு!

நமது பசி நீக்கும் உழவர் பெருமக்களைப் போற்றுவோம்
உயிரொளி தரும் கதிரவனுக்கு நன்றி-தீபம் ஏற்றுவோம்!

உலக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று
உண்மை அன்புடன் வாழ, என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jan-23, 11:11 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 65

மேலே