பால சுந்தரி
பால சுந்தரி
பால சுந்தரி பாடகங் கொண்டவள்
பாட முந்தரப் பாடகம் தந்தவள்
பாலன் நெஞ்சிலே ஆடகப் பொற்கொடி
பாட வந்தருள் ஆடகப் பொற்கொடி
கால காலனும் கைதொழும் பிள்ளையே
கைவ ணங்குவார்க் கன்னையாம் பிள்ளையே
மூல மாயவள் முத்திரை காட்டியே
முத்தி நல்குவாள் முத்திரை நீக்கியே
பாடகம் - கொலுசு
பாடு + அகம் - பாடகம்
ஆடகப் பொன்
ஆடு அகம் ஆடகம்
மகேஸ்வரி விடையினில் விரைகவே
மலர்களில் மணப்பவள் வருகவே
மனங்களி லமைதியை யருள்கவே
மலைமகள் தோள்களி லுதித்தவள்
மகேஸ்வரி விடையினில் விரைகவே
மலர்கள்மல் லிகைவில்வம் ஏற்பவள்
மனங்களில் வலிமையை யருள்கவே
கலை, வளம் நலங்களை யருள்பவள்
கவிமடல் மலர்ந்திட வருள்கவே
வாகெள மாரி தாயே
சூல மங்கலத் தாயே
சூழ மங்கலம் தாயே(ன்)
கால கால னாக
கால காலன் ஆக
வாலை நீயே செய்தாய்
வாகெள மாரி தாயே
ஞாலம் வாழப் பெய்வாய்
நாளும் மாரி நீயே
வராகி மாலை ஏற்பாய்
உலக்கை கலப்பை எடுப்பாய்
உலகுக் குண(ர்)வை யளிப்பாய்
கலக்கும் பகைமை யொழிப்பாய்
கருணை யதனைச் சுரப்பாய்
நிலத்தின் கிழங்கே புசிப்பாய்
நினைவில் வலிமை கொடுப்பாய்
மலர்கள் போல மணக்கும்
வார்த்தை மாலை ஏற்பாய்
செல்வத் திருமகளே
நெல்லிக் கனிதரும் நெஞ்சம் நெகிழ்ந்திட
நெல்லிப் பொன்மழை பொழிந்தவள்
செல்வம் படைத்தவர் அள்ளி வழங்கிடின்
செல்வம் பெருகிடப் பொழிபவள்
செல்வத் திருமகள் தங்கு மலைமகள்
தெய்வத் திருமகள் வருகவே
மல்லை கிடப்பவன் மார்பில் அமர்ந்தவள்
மனையறம் விளங்க வமர்கவே
வைஷ்ணவி தேவி போற்றி
கல்கியின் வரவை எண்ணி
காத்திருந் தருளும் தாயே
செல்வனை செல்வ னாக்கும்
செல்வியே போற்றி போற்றி
நல்லவை எல்லாம் நல்கும்
நாயகி போற்றி போற்றி
வல்லமை தருவாய் போற்றி
வைஷ்ணவி தேவி போற்றி
இந்தி ராணி என்றும் காப்பாள் இசை பாடு
இந்தி ராணி என்றும் காப்பாள் இசைபாடு
முந்தி வந்து முன்பு நிற்பாள் முனைப்போடு
நிந்தை இல்லா நெஞ்சந் தன்னில் நிறைவாளே
சிந்தை யெல்லாம் சித்த சுத்தி யருள்வாளே
நாரியரி போற்றி
நாரியரி யாகவெழும் ஞானவடி வானவளை
நாடிஇசை பாடிப் பணிந்தேன்
நேரிலருள் நீலியினை நெஞ்சினிலே நான்நினைய
நேரிலருள் செய்ய வெழுந்தாள்
வீரியமும் கூடிவர வெற்றியது நாடிவர
வித்தகத்தை என்னுள் விதைத்தாள்
காரிகையில் நின்றருளும் காரிகையைக் கைதொழுதேன்
காரியத்தில் சித்தி யளித்தாள்
கட்டளை யிட்டே கவிபாட வைத்தாள்
கட்டளை யிட்டே கவிபாட வைத்தாள் கனிந்தருளக்
கட்டளை யிட்டே கவிபாடி நின்றேன் கருது(ம்) மனம்
கட்டளை யாமல் கரைசேர்க்கும் சாமுண்டி காத்தருள்வாய்
அட்டமா சித்திக் கருளுவாய் அட்டமி அம்பிகையே
கவனகம் தந்தாய் கனிந்து
நவராத் திரிகளை நாளெட்டிற் காட்டும்
தவயோக வாணியே தாயே - தவமாய்
நவகவிதை பாடினேன் நானெட்டும் எட்டக்
கவனகம் தந்தாய் கனிந்து.
நவராத்திரிகளை நாளெட்டிற்காட்டும்
ஒன்பது திதிகளையும் எட்டே நாளில் காட்டி விட்டாள் இந்த ஆண்டில்
என்னே புதுமை
நவ கவிதை (ஒன்பது) புது கவிதைகளைப் பாட வைத்தவள்
அட்டமா சித்திகளை
வழங்குவாள் அன்றோ
கலாவல்லியே
தானம் தருமவ தானம் தரும்நல்நி தானம்தரும்
ஞானம் தரும்சிவ ஞானம் தரும்மெய்விஞ் ஞானம்தரும்
மோனம் தரும்நன் மொழியும் தருமிசை முந்தியெழும்
கானம் தரும்பூங் கமலா சனத்துக் கலாவல்லியே.

