மாயாவதி மத்தியமாவதி 2
மத்தியமாவதி: என்ன மாயாவதி இந்த மாதம் நம் மாதர் சங்கத்தில் உருப்படியாக ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லையே?
மாயாவதி: அடுத்த வாரம் அருமையான ஒரு நிகழ்ச்சியை நடத்த நம் சங்கத்தலைவி 'கடுப்பு சுந்தரவல்லி' திட்டம் போட்டிருக்கிறார்கள் .
மத்தியமாவதி: அதென்னடி கடுப்பு சுந்தரவல்லி? எனக்குத் தெரிந்தவரை அவர் பெயர் கே. சுந்தரவல்லி.
மாயாவதி: எனக்கே நேற்றுதான் இந்த விஷயம் தெரிந்தது. தலைவி என்னையும் இன்னும் சில மாதர் சங்கஉறுப்பினர்களையும் நேற்று அழைத்துப்பேசினார். அப்போது நமது உறுப்பினர் ' துடுப்பு தையல்நாயகி' தலைவியிடம் "மேடம், நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கலாமா?" என்றபோது அவர் " தாராளமாகக்கேள் நாயகி. நான் முடிந்தவரை வெளிப்படையாகவே இருக்கவிரும்புகிறேன்" என்று சொன்னார்.
மத்தியமாவதி: ஓ, கேட்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறதே, என்ன கேட்டாள் நம் துடுப்பு நாயகி?
மாயாவதி: அவள் கேட்டாள் "மேடம் நீங்க பேசுகையில் அடிக்கடி ' கடுப்பு' என்கிற சொற்பதத்தை உபயோகிக்கிறீர்கள். 'நேத்து எனக்கு கடுப்பா போயிடுச்சு' ' அவள் மேல எனக்கு ஒரே கடுப்பு' ' வர கடுப்புக்கு உன்னை அடுப்புல போட்டுடணும்போல இருக்கு' ' கடுப்புன்னா அப்படி ஒரு கடுப்பு' ' இன்னிக்கி எந்த அரசியவாதி பேசினாலும் ஒரே கடுப்பா இருக்கு' என்பது போன்ற கடுப்பு வார்த்தைகள் நீங்கள் கடந்த இரண்டு நாட்களில் பிரயோகம் செய்தவை" என்று.
மத்தியமாவதி: ஐயோ, அப்படீன்னா கடுப்பு தையல்நாயகி இன்னும் கடுப்பாகி வெடித்திருப்பங்களே?
மாயாவதி: நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் தலைவி ரொம்ப கூலா பதில் தந்தாங்க. "நான் சாதாரணமாக ரொம்ப கடுப்பு அடைந்தாலும் நீ இப்ப கேட்ட கேள்வி எனக்கு கடுப்பைத்தரல. என் அப்பா அந்த காலத்துல அடுப்பு ரிப்பேர் செய்து எங்க குடும்பத்தைக் காப்பாற்றினார். ஒரு முறை ஆடிப்பதினெட்டு, அதுவும் ஆகஸ்ட் பதினெட்டு அன்று என் அப்பா பதினெட்டு அடுப்புகளை ஒரே நாளில் ரிப்பேர் செய்து கொடுத்தார். அன்னிக்குத்தான் இரவு நான் பிறந்தேனாம். அதனால் எனக்கு அடுப்பு சுந்தரவல்லி என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
அந்த நேரத்தில் இன்னொரு உஷாரான சங்க உறுப்பினர் உஷா 'அப்போ உங்கபேரு ஏ.சுந்தரவல்லின்னுதானே இருக்கனும். ஆனால் கே சுந்தரவல்லின்னுதானே உங்கபேரு இருக்கு? என்று வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதுபோல தனது சந்தேகத்தைக்கேட்டாள்.
அதற்கு தலைவி சொன்ன பதில் என்ன தெரியுமா?
மத்தியமாவதி: அவங்க என்ன பதில் சொன்னாங்கன்னு எனக்குத்தெரிஞ்சா நான் நேத்திக்கே உனக்கு போனில் பேசி சொல்லியிருப்பேனே?
மாயாவதி: ம்ம்ம். அப்படிவா வழிக்கு. தலைவி சொன்ன பதில் "நான் பத்தாவது படிக்கையில் என் தோழிகள் அனைவரும் என்னை வெறும் அடுப்பு அடுப்பு என்றே கூப்பிட்டுவந்தார்கள். எனக்கு இதைக்கேட்டு கேட்டு வெறுப்பாகி ஒரு நாள் ரொம்ப கடுப்பு வந்துவிட்டது. என் அப்பாவிடம் சென்று "அப்பா, நீங்க எனக்கு வச்ச முழுப்பெயர் 'அடுப்பு சுந்தரவல்லி’ இந்த பேரைப்பார்த்தால் ரெண்டு பதங்களுமே சரியில்லை. ஒன்னு அடுப்பு இன்னொன்னு சுந்தரவல்லி. இந்தப் பெயரைக் கேட்டாலே நான் ஒரு சமையற்காரி போல இருக்கு. அப்போ என் அப்பா கேட்டார் "சரிம்மா. உன்னை நான் வேதனைப்படுத்த விரும்பவில்லை. அடுப்பைவேணுமானாலும் மாற்றிவிடலாம் ஆனால் சுந்தரவல்லி என்ற பெயர் மட்டும் இருக்கட்டுமே. நாங்கள் அன்றாடம் வணங்கும் சுந்தரேசன் சுந்தரவல்லி நினைவாகத்தான் இந்தப் பெயரை வைத்தோம்." என்றார்.
அப்போது எனக்கு வந்த கடுப்பில் "சரிப்பா. உங்க விருப்பப்படி செய்யுங்க, குறைந்த பட்சம் இந்த அடுப்பையாவது நீக்கிடுங்க இல்லை மாத்திடுங்க" என்றேன். அப்போது என் அப்பாவும் கொஞ்சம் கடுப்பாகி "சரிம்மா, உன் பேரை ' கடுப்பு சுந்தரவல்லின்னு' மாத்திவிடுகிறேன்' என்றார்.
எனக்கு அப்போதிருந்த கடுப்பில் ' ஏதோ ஒன்னு, பெயரை மாத்தினால் சரி' என்று சொல்லிவிட்டேன். அதன் பின்னர்தான் என்னுடைய பெயரை ' அடுப்பு சுந்தரவல்லி என்பதை மாற்றி கடுப்பு சுந்தரவல்லி என்று என் பள்ளிச் சான்றிதழில் மாற்றிவிட்டார்கள்.
மத்தியமாவதி: இதைக் கேட்கும்போது எனக்கு இடுப்பு விட்டுவிடும் போல இருக்குது. நம் தலைவியைப்பற்றி இன்று பேசியது போதும். இனிமேலும் பேசினால் நம் இருவருக்குமே கடுப்பு அதிகமாகிவிடும். ஆமாம், எனக்கு ஒரு சின்ன சந்தேகம். ஆடிப்பதினெட்டு அன்னிக்கு, அதுவும் ஆகஸ்ட் பதினெட்டு அன்னிக்கு, அதுவும் அவருடைய அப்பா அன்னிக்கு பதினெட்டு அடுப்பு ரிப்பேர் செய்துகொடுத்த அன்று பிறந்ததால் அவருடைய பெயரைப் "பதினெட்டு அடுப்பு சுந்தரவல்லி" என்றுதானே வைத்திருக்கவேண்டும்.
மாயாவதி: ???