469 எல்லாரும் வணங்கும் ஏற்றம் அறம் தரும் – அறஞ்செயல் 21
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
நாம்பணி வோர்க ளெல்லாம்
= நமைத்தொழச் செய்யும் தேவர்
ஆம்பணி நல்கும் விண்ணும்
= அகிலமும் வணங்கச் செய்யும்
சாம்பணி யில்லா ஈசன்
= தாளிணை மருவச் செய்யும்
தேம்பணி தரும மல்லால்
= செல்வம்வே றுளதோ நெஞ்சே. 21
- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
மனமே! இனிய எழிலமைந்த அறமே, நாம் முன்பு தாழ்ந்து வணங்கியவர்களைக் கொண்டு நம்மை வணங்கச் செய்யும். நம்மைத் தெய்வநிலை எய்தச் செய்யும். விண்ணும் மண்ணும் பிறவற்றிலும் உள்ளவர்கள் எல்லாரும் நம்மை வணங்குவர். இறப்புப் பிறப்புத் தொழில் என்றும் இல்லாத முழுமுதலின் திருவடியைப் பொருந்தி இன்புறச் செய்யும். இவ்வறத்தினில் பெரிய வாழ்வு வேறுண்டோ? இல்லை.
பணிவோர் - வணங்கப்படுவோர். தொழில் - வணங்கல். சாம்பணி - இறக்குந் தொழில்.
தேம்பணி - இனிய எழில். தருமம் - அறம்.