468 எல்லா வாழ்வும் இயைப்ப தறமே - அறஞ்செயல் 20
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
அணியிலார்க் கணியாம் வாய்ந்த
= அழகிலார்க் கழகாம் நீண்ட
பிணியினார்க் கெக்க ளிப்பாம்
= பேறிலார்க் கன்ன தாமுள்
துணிவிலார்க் குணர்வெல் லாமாம்
= துப்பிலார்க் கொப்பில் துப்பாம்
தணிவில்பாக் கியங்க ளெல்லாம்
= தருமமல் லதுவே றுண்டோ. 20
அறஞ்செயல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”அறம் செய்யும் செயலானது நகை இல்லாதவர்களுக்கு நகையாகும்.
செயற்கை அழகும், இயற்கை அழகும் இல்லாதவர்களுக்கு அழகாகும்.
நெடுநாள் நீங்காத நோயுள்ளவர்க்கு அந்நோய் நீங்கி மிக்க மகிழ்ச்சியுண்டாகும்.
பாக்கியமாகிய செல்வமில்லாதவர்க்கு வேண்டும் செல்வம் தரும்.
உள்ளத்தில் துணிவு இல்லாதவர்க்கு துணிவு தரும் உணர்வுமாம்.
துணை இல்லார்க்குத் ஒப்பில்லாத துணையும் தரும்.
அழிவில்லாத கடவுளின்பப் பேறும் தரும்.
அதனால், அறஞ்செய்வதைக் காட்டிலும் சிறந்த அறம் வேறுண்டோ?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
எக்களிப்பு - மிகுமகிழ்ச்சி. பேறு - செல்வம். பாக்கியம் - கடவுளின்பம்.
தருமம் – அறம், ஒப்பில் துப்பு - தக்க துணை. தணிவில் - அழிவில்லாத.