89 கல்வி இல்லாத செல்வம் பிள்ளை உயிர்க்கு காலன் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 6

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கலைபயிற் றாதுகா தலர்க்கு மாநிதி
நிலையென அளிக்குதல் நெறியில் பித்தர்க்குக்
கொலைசெய்வா ளீவதுங் குழவி தன்னைமா
மலையினோ ரத்துவைப் பதுவும் மானுமே. 6

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தேவையான கல்வியைக் கற்றுத் தராமல், பிள்ளைகளுக்கு பெரும்பொருள் நிலையெனக் கருதிக் கொடுப்பது, ஒழுக்கமில்லாத கிறுக்கருக்குக் கொலை செய்யக்கூடிய வாளைக் கொடுப்பதும், பச்சிளங் குழந்தையைப் பெரிய மலையின் ஓரத்தில் வைப்பதுவும் போன்றதாம்” என்று கல்வி இல்லாத செல்வம் பயனற்றது என்கிறார் இப்பாடலாசிரியர்.

காதலர் - பிள்ளைகள். நெறி - முறை, ஒழுக்கம். மா - பெரிய. மானும் - போன்றதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 4:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே