வெட்டப்படாதக் கால் நகங்கள்

சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோடி நல்ல பிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை வாங்கினேன். எந்தவொரு பிராண்டட் பொருளும் சிறிய விலையில் வருவதில்லை. நான் அந்த ஷூக்களை முக்கியமாக விறுவிறுப்பான நடைபயிற்சிக்குத்தான் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தேன். சில சமயங்களில் மாலை விருந்துகளுக்கும் அணிந்துவந்தேன். இந்தத் தரமான காலணிகள் குறைந்தது மூன்று வருடங்கள் பயன்படும் என்று நினைத்துதான் வாங்கினேன்.

சுமார் ஆறு மாத உபயோகத்திற்குப் பிறகு, இரண்டு ஷூக்களின் முன் முனையிலும் ஒரு கிழிசல் போல இருப்பதை நான் அவ்வப்போது கவனித்தேன். நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்தேன். அடுத்த இரண்டு மாதங்களில், அந்த கிழிசலான இடங்களிலிருந்து சிறிய துளைகள் தோன்றுவதை கவனித்தேன்.

ஷுக்களில் ஏன் துளைகள் ஏற்பட்டது என்பதை அறியாமல், பிராண்டட் ஷூ என்று அழைக்கப்படும் ஷூக்களின் உற்பத்தியின் தரம் குறித்து என் மனைவியிடம் புகார் செய்தேன். அவள் என்னிடம் “ஆம், சில சமயங்களில் தரமான தயாரிப்புகளும் விரைவாக சேதமடைய வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற கோணங்களில் இருந்து பாருங்கள். உங்கள் கால் நகங்களை தவறாமல் ட்ரிம் செய்கிறீர்களா?”
இந்தக் கேள்வி என்னை ஒரு கணம் திகைக்க வைத்தது, உடனே என் கால் நகங்களை ஆராய்ந்தேன். என் மனைவி சரியாகச் சொன்னாள், என் கால்விரல்களின் நகங்கள் சரியாக வெட்டப்படவில்லை, குறிப்பாக கட்டைக் கால்விரல் மிகவும் நீளமாகவும் கூர்மையாகவும் வளர்ந்திருந்ததால், அது அதன் தொடர்பிலிருக்கும் பொருட்களை உறுத்திக் குத்திவிட வாய்ப்பு இருந்தது. என் கட்டைக் கால்விரல் என் காலணிகளில் பதிந்திடும் நிலையை நான் கவனமாக ஆய்வு செய்தேன். நான் காலணிகளை அணியும்போதெல்லாம், கால் நகங்கள், குறிப்பாக கட்டைக் கால்விரல் நகங்களை வெட்டி ட்ரிம் செய்யாததால், மிகவும் வளர்ந்த அதன் கூர்மையான நகங்கள் ஷூவின் நுனியில் பட்டு என் கால்விரல்களின் அசைவின் காரணமாக நகங்கள் காலணிகளின் நுனிகளைத் துளைத்திருக்கிறது என்ற சிறிய உண்மை தெரியவந்தது.

எனது கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதைக் காரணமாக இந்த காலணிகளை வேறு சில சந்தர்ப்பங்களில் அணிவதற்கு என்னால் பயன்படுத்த முடியவில்லை. நான் அவற்றை நடைபயிற்சிக்கு மட்டுமே பயன்படுத்தினேன். அதுவும் ஒரு வருடம் மட்டுமே நீடித்தது.

இறுதியில், மூன்று வருடங்கள் உழைக்கவேண்டியத் தரமான காலணிகளை ஒண்ணரை வருடம் கூட உபயோகிக்க முடியவில்லை. கை நகங்கள் மட்டுமின்றி கால் நகங்களையும் சரிவர வெட்டி பராமரிக்கவேண்டும் எனும் முக்கிய பாடத்தை மேற்கூறிய அனுபவத்தினின் மூலம் கற்றுக்கொண்டேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Feb-23, 4:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 38

மேலே