294 உடல் அசையார் பெரும் இகழ்ச்சி உறுவர் - சோம்பல் 7
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் மா விளம் / மா விளம் விளம்)
அசையும் வளிபுவி அசையும் அனல்சலம்
= அசையும் மரம்விளை பயிரெலாம்
விசையி னொடுமவை யசைவ திலையெனில்
= விளியு மெனல்நிசம் நரர்கள்தந்
தசைகொள் உடல்நிதம் அசைய வினைபல
= தரணி மிசைபுரி கிலரெனில்
இசையும் வலிகெடும் நலிகள் அடுமுறும்
= இசையின் மிசையொடு வசையுமே. 7
- சோம்பல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”காற்று, நிலம், நெருப்பு, நீர் முதலியன அசையும். மரம், விளையும் பயிர் முதலியனவும் அசையும். விரைவுடன் இவைகளெல்லாம் அசையவில்லை என்றால் அழிந்து விடும் என்பது உண்மை.
இது போல, மக்களும் தசைகளால் ஆன தம் உடம்பை தினமும் அசையும்படி உடல் உழைப்பு இவ்வுலகில் செய்யவில்லை என்றால் பொருந்திய உடல் வலிமை கெடும். துன்பங்கள் வருத்தும். புகழிற்கு மேலாக இகழ்ச்சியும் பெருகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
இசை - புகழ். மிசை - மேல். வசை - இகழ்.