141 கணவரை நீங்கில் கற்புடையார் வாழார் - கணவன் மனைவியர் இயல்பு 33
தரவு கொச்சகக் கலிப்பா
செழுமுளரி புனல்நீங்கில் செழிக்குமோ; படர்கொடிகள்
கொழுகொம்பை பிரியின்வளங் கொண்டுய்யு மோ;கணவர்
அழுதயர வைதாலும் அரந்தைபல இயற்றிடினுந்
தொழுதகுகற் புடையார்தன் துணைவரைவிட் டகல்வாரோ. 33
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“செழுமையான தாமரை, தண்ணீரை விட்டு நீங்கினால் செழிப்பை இழக்கும். படர் கொடிகள் கொழு கொம்பைப் பிரிந்தால் வளத்துடன் உயிர் கொண்டு வளராது.
அவை போன்று, அழுது சோர்வடையுபடி கணவர் திட்டினாலும், துன்பம் பல செய்தாலும் கணவனையே விரும்பி வாழும் கற்புடைய பெண்கள் கணவனைப் பிரிந்து நீங்க மாட்டார்” என இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.
முளரி - தாமரை. புனல் - தண்ணீர். அரந்தை - துன்பம். துணைவர் - கணவர்.
பிரேம்குமார் அவர்களின் தனிப்பட்ட கருத்து:
ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இது நடைமுறைக்கு ஒத்து வருமா? கணவர் திட்டினாலும், துன்பம் பல செய்தாலும் பெண்ணைப் பெற்றவர்கள் சகித்துக் கொண்டு இருப்பார்களா என்பது சந்தேகமே!
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனோதத்துவ ஆலோசனை இருவர்க்கும் தேவைப் படலாம். சமூக நல நீதிமன்றங்கள் உள்ளன. விவாக ரத்துக்களும் நடைபெறுகின்றன.
இதைத் தவிர்க்க கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பேசி சமாதானமாகத் தீர்வு காண வேண்டும். பொதுவாக, கற்புடைய பெண்கள் பண்புள்ள கணவனை அனுசரித்துப் போதல் நலம் பயக்கும்.
கவிஞர் கூறிய அக்கால நடைமுறை,
இக்காலமும் சிலரிடம் பொருந்துகிறது, அவர்களிடம் நல்ல கலாச்சாரமும், பொறுமையும் இருப்பதனால் (அவசரகால உலகமாயினும்). பொறுமை, மன வலிமை இவை யாவும் மருந்து.
ஆனால், அதிவிரைவு காலமாய் ஓடும் இப்போதைய மனிதர்கள், நேரம் ஒதுக்குவதில்லை;
பொறுமையுடம் சிந்தித்துச் செயல்படுவதில்லை.
நினைத்தது உடனே நடக்கவேண்டும் என்ற குறுகிய குறிக்கோளில், தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்கள்.
அனைவரும் நலம்பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
தாங்கள் கொடுக்கும் இக்காலத்திற்குப் பொருந்தக்கூடிய, தங்களது தனிப்பட்ட கருத்து, மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே என் அவா.