142 காதலர் நெஞ்சுயிர் மாறிக் கலந்தன - கணவன் மனைவியர் இயல்பு 34
தரவு கொச்சகக் கலிப்பா
பேதைமதி யுற்றனையென் றெனையிகழும் பெருந்தகையென்
காதலியைப் பிரிந்ததிந்தக் காயமொன்றே உயிருநெஞ்சும்
மாதவள்பா லுறையுமன்னாள் மனமுயிரென் பாலுறையும்
ஆதலினான் பேதைமதி ஆயினனென் பதுநிசமால். 34
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”அறியாமை கொண்டேன் என்று என்னை இகழும் உற்ற நண்பனே! என் காதலியை விட்டுப் பிரிந்தது இந்த உடம்பு ஒன்றுதான். என் உயிரும் உள்ளமும் அப்பெண்ணாகிய என் காதலியிடம் இருக்கின்றன. அவளது மனமும் உயிரும் என்னிடம் இருக்கின்றன.
அதனால் நான் பெண்ணறிவு உடையவன் என்று நீ சொல்லுவது உண்மையே” என்று தலைவன் சொல்வதாகவும், கருத்தொருமித்த காதலர்களின் நெஞ்சும் உயிரும் மாறிக் கலந்திருப்பது இயல்பே எனவும் இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.
பேதைமதி - அறியாமை. பெருந்தகை - பாங்கன், உற்ற நண்பன். காயம் - உடம்பு, மாது – பெண், இல்லத்தலைவி, மனைவி. பேதைமதி - பெண்ணறிவு. நிசம் - உண்மை.