225 தடுக்க முடியாவிடில் தானும் கொல்லுக – கொலை 12

கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு)

தனையெனி னும்பிறர் தம்மை யென்னினும்
முனையொடு கொலவரு முசுண்டன் தன்னுயிர்
இனைவதை செயலலா லுபாயம் வேறின்றேல்
அனையனைக் கொல்கநல் தீர்வும் ஆற்றுக. 12

– கொலை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

தன்னையாவது மற்றவர்களையாவது செருக்குடன் கொல்ல வரும் கீழ்மையான குணம் கொண்டவனை, தனது உயிரைப் பறிக்காமலிருக்க எவ்வகை வழிமுறையிலாவது தடுக்க முடியாவிட்டால் அத்தகையவனைக் கொன்று சரியான தீர்வைச் செய்யும்படியும் இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

முனை - செருக்கு. முசுண்டன் - கீழ்மகன். உபாயம் – சூழ்ச்சி, வழிமுறை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-23, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே