54 இறைவனை உணர்த்தி இன்பம் அருள்வோன் ஆசான் - ஞானாசிரியன் பெருமை 1
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
அகவிரு ளகல ஞான
..விளக்கினை யருளின் ஏற்றிச்
சகலமு நல்குங் கேள்வித்
..தனத்தினை நல்கி யாதிப்
பகவன்தன் சொரூபங் காட்டிப்
பவமற மிரண்டுங் காட்டிச்
சுகநிலை காட்டுந் தியாகத்
தோன்றலை மறவாய் நெஞ்சே. 1
- ஞானாசிரியன் பெருமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சே! ஞானவள்ளல் மன இருள் நீங்க மெய்யுணர்வு விளக்கை அருளோடு ஏற்றி, எல்லா நலமும் தரும் கேள்விச் செல்வத்தைத் தருபவன்.
ஆதிபகவானாகிய இறைவன் தன் திருவுருவைக் காட்டி பாவ புண்ணியங்களை உணர்த்துபவன்.
பேரின்பச் சுகத்தைக் காட்டும் தியாக உள்ளம் கொண்ட ஞானாசிரியரை மறவாதே” என்று அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.
தனம் - செல்வம். சொரூபம் - திருவுரு. பவம் - பாவம். தியாகத்தோன்றல் - ஞானவள்ளல்.