507 தாள்வெட்டல் பயனின்று தலைவெட்டென்பாள் பொதுமகள் – கணிகையரியல்பு 34

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

விலைமகட்கென் றயலகத்திற் கன்னமிட்டுத் துளைவழியுள்
..விட்ட தாளைக்
கொலைவாளாற் றறித்தனர்கூ கூவென்றேன் வேசையென்பாற்
..குறுகி யுக்கக்
கலைசோதித் தொன்றுமிலாச் சினத்தாலவ் வகத்தாரைக்
..கதறிக் கள்வன்
தலைதுமியுந் தாள்துமித்தென் பலனென்றாள் வெருவியுடல்
..சாணா னேனே. 34

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

பொதுமகட்குப் பொருள் கொடுக்க வேண்டுமென்று அயல் வீட்டில் நுழைவழி செய்து காலை உள்ளே விட்டேன். அகத்தவர் வாளால் காலை வெட்டினர். கூகூவென்று கூவினேன்.

பொதுமகள் என்னிடம் வந்து இடுப்பைத் தடவி மடியில் ஏதும் இருக்கின்றதா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லாமை கண்டு கடுஞ் சினம் கொண்டு, `கள்வன் என்று கதறி வீட்டாரை விளித்துக், கள்வன் தலையை வெட்டாது தாளை வெட்டியதால் பயன் என்னென்றாள்? யான் அஞ்சிச் சாண் உடல் ஆயினேன்.

விலைமகள் - பொதுமகள். அயலகம் - அடுத்த வீடு. கன்னம் - களவு செய்வதற்காகச் சுவரில் துளையிடுந்துளை.

தாள் - கால். உக்கம் - இடுப்பு. துமித்தல் - வெட்டல். வெருவி - அஞ்சி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 6:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே