103 கல்லாப் பெண் உயிர் இல்லா உடலே – மாதரைப் படிப்பித்தல் 10
கலிவிருத்தம்
(கூவிளம் கூவிளம் தேமா புளிமா)
நல்லறி வேயணி நன்னு தலார்க்கஃ(து)
இல்லவ ரோடுமி யைந்து கலத்தல்
புல்லுயிர் நீங்குபு ழுக்கொள் சவத்தைக்
கல்லுரு வைப்புணர் காம நிகர்த்தே. 10
– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நல்ல கல்வியறிவே பெண்களுக்கு அணிகலனாகும். அத்தகைய கல்வியறிவு இல்லாத பெண்களுடன் கூடி வாழ்தல் அற்ப உயிர் நீங்கிய, புழுக்கள் உண்ணக்கூடிய பிணத்தை, உணர்வற்ற கல்லுருவைக் கூடும் காம வாழ்வுக்கு ஒப்பாகும்” என்று பெண்கல்வியை இப்பாடலாசிரியர் மேலும் வலியுறுத்துகிறார்.
அணி - அழகு. நன்னுதலார் - பெண்கள்.