604 கல்லாதார் செய்குற்றம் ஈன்றாரைக் கட்டுறுத்தும் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 4

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பச்சைமண் கொடுநி னைத்த
..படிபல கலஞ்செய் வார்போல்
விச்சையு மறமு மூப்பு
.மேவுமுன் தம்ம கார்க்குப்
பிச்சைகொண் டெனினும் ஓதல்
.பெற்றவர் கடனா மன்றேல்
இச்சைசேர் பழிபா வங்கள்
.ஈன்றவர்க் கெய்து மாலோ. 4

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மாந்தர் விரும்பியவாறு பல்வேறு மட்கலங்களைச் செய்யும் வேட்கோவாகிய குயவன் பச்சை மண்ணைக் கொண்டுவந்தே கலங்களைச் செய்வான்.

அதுபோல், பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் தாய்தந்தையர், அப்பிள்ளைகளின் இளமைக் காலத்தில் அவர்களை நற்கல்வியும் நல்லொழுக்கமும் பொருந்திய நயனுடையாளராகச் செய்ய வேண்டும்.

ஒருவேளை பொருள் முடையால் நடைபெற முடியாவிட்டால் பெருந்தகையாரிடம் பிச்சை எடுத்தேனும் கல்வி பயிற்றுதல் வேண்டும்.

அங்ஙனம் செய்யாதொழிவரேல் அப்பிள்ளைகள் செய்யும் பெருந் தீமைகளால் நேரும் பழிபாவங்கள் பெற்றோர்களையே சாரும்.

விச்சை - கல்வி. அறம் - நல்லொழுக்கம். ஈன்றவர் - தாய்தந்தையர். எய்தும் - சாரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-23, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே