150 எப்பெருந் துன்பும் ஏகும் கனிவான பார்வையால் - கணவன் மனைவியர் இயல்பு 42

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு; (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

இரிஞ ராலுறும் எவ்வமுந் தேகமார்
பெரிய புண்களும் பேசருந் துன்பமும்
உரிமை வாண்முக நோக்க வொழிதலாற்
பிரியை நோக்கம் பெருமருந் தாமரோ. 42

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பகைவர்களால் ஏற்படும் துன்பமும், போரில், உடம்பில் ஏற்படும் பெரிய புண்களும், அதனைப் பிறர் பேசுவதால் உண்டாகும் துன்பமும் தனக்கு உற்ற ஒளிமிகுந்த முகத்தையுடைய காதலியின் அன்புப் பார்வையால் நீங்குகின்றன.

அதனால், காதலியின் கனிவான பார்வை துன்பம் நீக்கும் சிறந்த மருந்தாகும் அல்லவா” என்று தன் காதல் மனைவியின் கனிவான பார்வையினால் எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும் என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

இரிஞர் - பகைவர். எவ்வம் - துன்பம். உரிமை – காதலி ; மனைவி. பிரியை - காதலி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 9:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே