586 பொருள்சேர் புகழ் புகன்று போற்றுதல் கடனே - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 44

தரவு கொச்சகக் கலிப்பா

சிந்தா குலந்தீர்க்குஞ் செல்வமே நல்வளமே
நந்தா அறவிளக்கே நாயகமே தாயகமே
எந்தாயே கண்ணே இனியவுயி ரேநலங்கள்
தந்தாளுங் கற்பகமே தற்பரமே அற்புதமே
கந்தா மணியே கதிநிலையே ஆரமுதே
அந்தாயே யென்றேத்தா யாருதவி சொன்மனமே. 44

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும் நீதிநூல்,
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

நெஞ்சமே! ஆண்டவன் திருவடியிணையை உள்ளக்கவலையை ஒழித்தருளும் ஒண்பொருளே என்றும்,

அழிவில்லாத செழுமையே என்றும், கெடாத நன்மையருளும் விளக்கே என்றும், முதல்வனே என்றும்,

பொன்றாப் புகலிடமே என்றும், எந்தாயே! எம்மிரு கண்ணே! இன்னுயிரே! நாளும் வேண்டும் நலங்கள் தந்தாளும் நந்தாக் கற்பகமே! என்றும்,

தானே தனிமுதலாம் பெரும்பொருளே! என்றும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்து விளங்கும் விழுப்பொருளேயென்றும்,

அனைத்துயிர்க்கும் பற்றுக்கோடாம் அருமணியே என்றும், வானோர்க்குயர்ந்த மேனிலையேயென்றும், உண்ணத்தெவிட்டாப் பண்ணமுதே என்றும், `தாயினும் சாலப்பரிவுடைய அழகார் தாயே என்றும்

அகங்குழைந்து அன்புருகி இன்புற்று மெய்பொடிப்ப நாக்குழறப் `பூக்கையாலட்டிப் போற்றுவாயாக. அவனையன்றி உனக்குற்ற துணை யாருண்டு சொல்.

சிந்தாகுலம் - உள்ளக்கவலை. நந்தா - கெடாத. அறம் - நன்மை, நாயகம் - முதன்மை.
தாயகம் - புகலிடம். கற்பகம் - கற்பித்துத் தரும் திருவருள். தற்பரம் - முழுமுதல்வன். கந்து - பற்றுக்கோடு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Feb-23, 9:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே