மரணம்

மரணம்....!

நீள் துயில்
மீண்டும் உயிர்த்தெழா
ஆழ் துயில்.
உயிர்ப்போடு இருக்கும்
அணுக்கள் அணுஅணுவாய்
மண்ணாய் போகும்...
பிடி சாம்பலாய் தீயில்
எரிந்து போகும்...
காற்றோடு காற்றாய்
நீரோடு நீராய்
கரைந்து போகும்
உன்னத நிலை.
மரணம்...
சொல்லாத பாடங்கள் இல்லை
விளக்காத தத்துவங்கள் இல்லை
பாடாத பாடல்கள் இல்லை
நிலையற்றது வாழ்க்கை என்பதனை
நிலைநாட்டிடும் நிதர்சனமான
நிலையான நிலை.
மாய வலைகள் அறுத்து
மானுட மேனி துறந்து
பரமாத்மாவோடு
ஜீவாத்மா ஒன்றாய்
கலந்திடும்
ஏகாந்த நிலை.
அழுகையும் சோகமும்
நிறைந்திருந்தாலும்
நிம்மதியும் நிறைவும்
முழுமையடையும்
தியான நிலை.
ஒன்றுமில்லாமல் வந்து
ஒன்றுமில்லாமல் போகும்
ஒருவழிப் பாதையின்
பயண முடிவு நிலை.
கமாவாயில்லாமல்
முற்றுப்புள்ளியாய்
முடிந்து போகும்
முனிகள் போற்றும்
முக்தி நிலை.
மரணமே....
உன் தழுவலில்தான்
வாழ்வின்
எல்லா சங்கடங்களும்
தொலைந்து போய்விடுமே...
எல்லா சோகங்களும்
கலைந்து போய்விடுமே...
எல்லா காயங்களும்
கரைந்து போய்விடுமே...
பின் ஏன்
உன்னைக்கண்டு இப்படி
பயப்படுகிறார்களோ
புரியவில்லை.
உலக பந்தம் அறுத்து
நிரந்தர விடுதலை கொடுக்கும்
மரணமே
உன்னை நான் நேசிக்கிறேன்.
உன்னை நான் வரவேற்கிறேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (6-Mar-23, 8:36 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : maranam
பார்வை : 212

மேலே