உன்னதமானவளுக்கு

உன்னதமானவளுக்கு

என் உயிரெழுதும்
ஒரு கடிதம்

சூரிய சந்தியைகளில் மஞ்சள்மறைக் கொந்தவெளிக் கீழ்வானம் போல்
முந்தாணையிட்ட புகைக்கோலத்தில் தான் முதன்முறைக் கண்டது

முதல் காணலில் கனவுகள் பிறப்பது
ஆகாயகமனத்தில் பறப்பது என
பிஞ்சுநேசங்களில் திளைத்திருக்கவில்லை

என் ப்ரியங்களுக்கான முயற்சி என்பது
என்‌குரல் போல
இளையதாயொரு புன்னகைப்போல்
கண்களில் காணும் அமைதியைப்போல்
நெருப்பில் வார்த்தெடுக்கப்பட்ட
இரும்பினைப்போல்
கனம் நிறைந்தது.

நாளங்களில் உறைந்து கிடக்கும்
இரத்தம் போல்
என் ரணங்களின் நடுவே கட்டியாகிக் கிடக்கிறாய்.

நான் மட்டும் அழைத்துவிடவேண்டுமாய்
ஒருச் செல்லப் பெயரிட்டு
அடைகாத்திருக்கிறேன்

ஆன்மாவின் குரல்
உன் கனவுகளில் ஒலிப்பரப்புவதாக
ஒரு மூட நம்பிக்கையினூடே
காலங்கள் விரைந்தோடுகின்றன

என் விழி ஓங்கும் உன் வரவிற்கான காத்திருப்பு
உன்னை சஞ்சலப் படுத்தவேண்டாம்
உன்னைச் சுற்றித் திரியும்
பாவியென நான்
இன்பப்பழியின் கரு சுமக்கிறேன்

உன் நகர்வுகளின் சுமதலைகளுக்கு
விடையாகிடவா வந்தேன்
என் தொடருதல்கள்
ஏக்கமெனக் கருதாதே
துளிநீரின் கனம் கூட உணரமாட்டாய்
என்றறிவேன்
உன் கண்களில் சுற்றித் திரியும்
ஏக்கத்திற்கு பெயர்த்தெரியாத
மருந்தாகிடத்தானே வந்தேன்

உன்னை உணர்ந்த பிறகு
என் கனவில் என்றும்
ஒரு அப்சரஸ் அடிக்கடி வந்து சொல்லிச் செல்கின்றது
அவள் உனக்கானவள்
உன்னுடையவள்
அவளுக்கு அருகில் இரு
அவளை மிஸ் பண்ணிடவேண்டாம் என .

ஆணியில் அறையப்பட்ட ஏசுவின்
தொண்டைக்குழியின்,
அழுக்குரலின்
நரிட்சிதான்
என் நேசம் சொல்ல உன்னிடம்
நெருங்கிடும்போதெல்லாம்.
"மெளனித்தொடுங்கி விட்டேன்"

என் ஆசைகளையோ
ஆறுதல்களையோ
உன் மேல் திணிக்கவேண்டிடாத
நேரங்களையே
அதிகம் விரும்பியிருந்தேன்
உன்னை நேசித்திருந்தேன் .

உன்னிடம் சதா அரசாட்சி செய்துக் கொண்டிருக்கும்
அனைவரில் ஒருவனாகிவிடும்
எண்ணமில்லை
மெனக்கெடுதல்களும் எனக்கில்லை
இதோ நீ அரசாளவே
எங்கிருந்தோ வந்து
உன் முன்னால் நிற்கிறேன்.
உனக்கு புரியாவிடிலும்
இந்த நேசம் உண்மைதான்

"உடன் இருக்கவேண்டும்
உன்னை மணிக்கணக்கில் பேசவிட்டு
கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
உன் வலிகளின் கதறல்களைப் பிரசவிக்கும்
அன்னையாகி
எப்போதுமுன்னை
என் மடி சுமந்திருக்கவேண்டும்.
விட்டுக் கொடுக்காத அடங்களுடன்
உன் கண்ணீர்த் துளிகளுக்கு
அறைகூவல் விடுத்து
சன்னப்பின்ன மழைப்போல
என்றும் எப்போதும் சிரிக்கப்பார்த்து
ரசிக்கவேண்டும்
நம் இருவரின் ஆயுள்வரையும்
இது தொடர்ந்திடல் வேண்டும்

என் நேசம் சுமக்கும் சக்தி உன்னிடமில்லை
அடுத்தடுத்த ஜென்மங்களிலாவது
உடனிருப்போமா ?

உனக்காயெனவே
சீக்கிரம் மரித்துவிடப் பிரார்த்திக்கிறேன்

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (7-Mar-23, 3:10 am)
பார்வை : 209

மேலே