செய்தது உவவாதார்க்கு ஈத்ததை யெல்லாம் இழவு - பழமொழி நானூறு 307

இன்னிசை வெண்பா

தமராலும் தம்மாலும் உற்றாலொன் றாற்றி
நிகராகிச் சென்றாரும் அல்லர் இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப! செய்த துவவாதார்க்(கு)
ஈத்ததை யெல்லாம் இழவு. 307

- பழமொழி நானூறு

பொருளுரை:

பரந்த அலைகள் வெள்ளம் போல் பரக்கும் நீரையுடைய குளிர்ந்த கடல் நாடனே!

தம்முடைய சுற்றத்தாராலும் தம்மாலும் ஒருவருக்கு ஓரிடர் வந்தவிடத்து ஒரு பொருளுதவி அவர் மனமொப்ப ஒழுகினாருமல்லர். அதுவன்றி, செய்ததைக் கொண்டு மனம் மகிழாதவர்களுக்கு கொடுத்த பொருள்கள் எல்லாம் இழந்த பொருள்களேயாம்.

கருத்து:

பெற்றதைக் கொண்டு மனம் உவவாதார்க்குப் பொருள் கொடுத்தல் ஆகாது.

விளக்கம்:

வறியார்க்கு ஒன்றும் ஈயாராதலே யன்றி என்பதைத் தழுவி நின்றது. தம்மால் ஒருவருக்கு வந்துற்ற இடரினையும் தீர்க்காதவர்களாகிச் செய்தது உவவாதார்க் கீவர். அதனால் இம்மைக்குரிய புகழுமில்லை யாதலின், இழந்த பொருளேயாம்.

'செய்தது உவவாதார்க்கு ஈத்ததையெல்லாம் இழவு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-23, 9:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே