கண்ணில் நிறைந்த காதலும் எங்கே
கண்ணில் நிறைந்த காதலும் எங்கே?
கடமை என்றிருந்த காவலும் எங்கே?
சொற்கள் குவிந்த கூக்குரல் எங்கே?
புற்கள் முளைத்து போனது இங்கே...
மண்ணில் பிறந்தது மண்ணுடன் போக
தீயில் பிறந்தது தீயினில் எரிய
நீரில் பிறந்தது நீரினில் கரைய
காற்றில் பிறந்தது காற்றினில் கலக்க
வாங்கிய பட்டங்கள் ஆயிரம் இருந்தும்
தேடிய செல்வங்கள் கோடியில் குவிந்தும்
போற்றிய புகழ்கொடி உயரத்தில் பறந்தும்
தேற்றுவார் இன்றி தெருவினில் கிடத்தும் ...
ஆறுதல் அளித்த தாய்மடி எங்கே?
ஆதரவான தந்தையும் எங்கே?
கூடி குலாவிய சொந்தங்கள் எங்கே?
கூட்டைத் திறந்திட பறந்தது அங்கே....
பெற்று எடுத்த பெற்றவர் எங்கே?
பற்றி வந்த நல்மனைவியும் எங்கே?
பெற்று எடுத்த பிள்ளையும் எங்கே?
வெற்று உடம்பு போனது தனியே...
மரணத்தைப்போல் ஒரு வேதமும் இல்லை
மரணத்தைப்போல் ஒரு அமைதியும் இல்லை
மரணம் சொல்லாத பாடங்கள் இல்லை
மரணம்ஒன்றே நம் வாழ்வின் எல்லை...
வாழ்வு சொல்லாத தத்துவம் எல்லாம்
மரணம் சொல்லும் விழிகள் நனையுமே
மரண அடி தினம் வாங்கிய பின்னும்
சொரணை இன்றி இந்த மானுடம் வாழுமே...
உறவை சொல்லி அழுவதினாலே
உயிர்பெற்று உடல்இங்கு எழுவதும் இல்லை
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தும்
செத்தவன் மீண்டும் உயிர்ப்பதும் இல்லை...
ஓடிய நாட்கள் நிற்பதும் இல்லை
கரைந்திடும் நிமிடங்கள் நிறைவதும் இல்லை
தேடிய செல்வங்கள் தேர்வதும் இல்லை
நாடிய உறவுகள் சேர்வதும் இல்லை
பயணம் முடிந்து பாசறை வந்து
பயண களைப்பில் கண்களை மூடி
சுவாசம் விடநாம் மறந்தே போக
சவமாய் மாறி சிவனுடன் கலக்கும் .
மரணத்தின் முன்பு யாவரும் சமமே
அரசனும் ஆண்டியும் அதன்முன் சமமே
அறிஞரும் அறிவிலி இருவரும் சமமே
அளவில்லா செல்வமும் பிச்சையும் சமமே
சாதி மதங்களும் மரணத்திற்கு இல்லை
ஆதியாகிய ரத்த பந்தமும் இல்லை
பாதியில் முடியும் பாசமும் இல்லை
ஓதி ஒடுங்கிட மரணம்தான் எல்லை.