நளன் அன்னத்தை அஞ்சாதே என்று கூறல் - நள வெண்பா

நேரிசை வெண்பா

அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும் (ஒரூஉ மோனை - 1, 4 சீர்களில் மோனை)
வஞ்சி அனையார் மணிநடையும் – விஞ்சியது (பொழிப்பு மோனை - வ வுக்கு ம மோனை)
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு (ஒரூஉ மோனை - 1, 4 சீர்களில் மோனை)
மாணப் பிடித்ததார் மன்! 34 (பொழிப்பு மோனை -1, 3 சீர்களில் மோனை)

பொருளுரை:

தேனுண்டு களிகொள்ளும் வண்டினங்கள் மிகுதியாக மொய்த்துள்ள மலர்மாலை யணிந்த நளமன்னன் மட அ(ன்)னமே! அஞ்சாதே; உனது அழகிய நடையும், வஞ்சிக்கொடி போன்ற மங்கையரின் சிறந்த நடையும் (இவைகளுள்) எந்நடை சிறந்தது என்று கண்டு தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துக்கொண்டு வந்ததன்றி வேற்றிலை நீ தெரிந்துகொள் என்றுரைத்தான்!

கருத்து:

நளமன்னன், ‘அன்னமே! நீ அஞ்சாதே உன்னைப் பிடித்தது, உன்நடை சிறந்ததா? மங்கையர் நடை சிறந்ததா? என்று அறிவதற்கு காண்பாயாக’என்றான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-23, 7:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே