துயரம் துடைத்திடவே

துயரம் துடைத்திடவே...!
----------------------
குருடனாய் நானும் பிறந்திருந்தால் - நடக்கும்
கூத்துகள் யாவும் காணாது இருந்திருப்பேன்.
செவிடனாய் நானும் பிறந்திருந்தால் - பொய்ப்பித்தலாட்ட
கதைகளை எல்லாம் கேட்காது இருந்திருப்பேன்.
ஊமையாய் நானும் பிறந்திருந்தால் - மனதார
குறைகள் கூறி பிதற்றாமல் இருந்திருப்பேன்.
முடவனாய் நானும் பிறந்திருந்தால் - கையூட்டு
கருப்பு பணம்தனை வாங்காது இருந்திருப்பேன்.
நொண்டியாய் நானும் பிறந்திருந்தால் - இந்தப்பாவ
பூமியில் என்தடம் பதிக்காது இருந்திருப்பேன்.
நலமாய் பிறந்து வந்ததன் பயனை
நாளும் அனுபவித்து சித்ரவதைக் குள்ளாகிறேன்.
ஒட்டவும் முடியவில்லை. ஓடிஒளியவும் முடியவில்லை.
வெட்டவும் முடியவில்லை.வெற்றிகொள்ளவும் முடியவில்லை.
எனக்குள் எங்கோ ஒருகுரல் ஓங்கிஒலிக்கிறது.
உன்னால் முடியும். என்ற தாரக மந்திரம்.
குறைகள் யாவையும் தகர்த்திட எனக்குள்
உற்சாக பெருவெள்ளம் காட்டாறாய் பெருகுது.
குறையோடு பிறந்தவன் நிறைவோடு வாழவில்லையா?
வாழ்க்கையோடு போராடி வெற்றிவாகை சூடவில்லையா?
எல்லாம் இருந்தும் நான் ஏன்? வருந்தவேண்டும்.
சொல்லில் பயனில்லை. செயலில் காட்டிடவே
துள்ளி எழுந்து விட்டேன். துயரம் துடைத்திடவே...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Apr-23, 1:26 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 183

மேலே