கைகேயி கேட்ட வரம் இவையெனல் - கலித்துறை
கலித்துறை
(தேமா புளிமா புளிமா தேமா தேமா)
ஏய வரங்கள் இரண்டின், ஒன்றி னாலென்
சேய ரசாள்வ து;சீதை கேள்வன் ஒன்றால்
போய்வ னமாள்வ தெனப்பு கன்று, நின்றாள் -
தீய வை,யாவை யினும்,சி றந்த தீயாள். 14
- கைகேயி சூழ்வினைப் படலம்,
அயோத்தியா காண்டம், கம்பராமாயணம்
பொருளுரை:
கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும் மேம்பட்ட கொடியவளான கைகேயி;
(நீ) கொடுத்த இரு வரங்களுள் ஒரு வரத்தினால் என்மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும்;
மற்றொன்றினால் சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும் என்று சொல்லி மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.
தீயவை - நெருப்பு, கூற்றுவன், நஞ்சு, பாம்பு முதலியன
‘சிறந்த’என்பது கொடிய என்னும்பொருளைத் தரும்,
‘நல்ல பாம்பு’ ‘நல்ல வெயில்’என்பவற்றில் நல்ல என்பது கொடிய என்னும் பொருளைத் தருவது போல,
இத்தகைய கொடிய சொற்களை அஞ்சாது சொல்லி நிற்றல் இவளையன்றிப் பிறர்க்கு அரிது என்பதனால் ‘புகன்று நின்றாள்’ என்றார்.