பதவிஓய்வு நாள்
பொதுவாகவே நன்றாக ஆடைகள் அணிந்துகொள்ளும் ராமச்சந்திரன் அன்று மிகவும் சிறப்பாக உடைஉடுத்தி அலுவலகம் சென்றான். அவன் பணிபுரிந்துவந்த நிர்வாகம், மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பெரிய மின்சாரக்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாகும். ஏறத்தாழ முப்பத்திஐந்து வருடங்கள் ராமச்சந்திரன் இந்த நிர்வாகத்தில் பணிபுரிந்தான். அன்று ஏன் அவன் கோட்டும் சூட்டும் அணிந்து டை சகிதம் அலுவலகம் சென்றான்? ஏனெனில் அன்றுதான் அலுவலகத்தில் அவனது கடைசி நாள், பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள். அன்று அவன் மதியம் வீட்டிற்குச்சென்று குடும்பத்துடன் உணவு அருந்திவிட்டு, குடும்பத்துடன் அலுவலகம் சென்றான். அவனது பதவி ஓய்வு விழா அன்று அவன் பணிபுரிந்துவந்த துறையின் வளாகத்தில் நடந்தது.
எப்போதும்போல ஒரு கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. கடவுள் வாழ்த்துப் பாடியது, அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டான் "எவ்வளவு அலுவலக ஊழியர்களின் பதவி ஓய்வு தருணங்களில் நான் கடவுள் வாழ்த்துகளை பாடியிருக்கிறேன். இன்று நான் ஓய்வு பெறும்போது, குரலில் உயிரே இல்லாமல் ஒரு பெண்மணி கடவுள் வாழ்த்து வழங்கினார். கடவுளுக்கே நான் ஓய்வு பெறுவதில் கவலையோ என்னமோ, கம்பீரம் பாவம் இல்லாத ஒரு கடவுள் வாழ்த்தை அவர் இப்போது கேட்கவேண்டியதாயிற்று".
கடவுள் ஓடியதைத் தொடர்ந்து, மன்னிக்கவும், கடவுள்வாழ்தினைத்தொடர்ந்து ராமச்சந்திரனுக்கு ஒரு மலர்ச்செண்டு கொடுக்கப்பட்டது. அதன் பின் அவன் அமர ஒரு இருக்கை கொடுக்கப்பட்டது. அவனிடம் ஏற்கெனவேயுள்ள இரு கைகள் கொண்டு அவன் இருக்கையில் அமர்ந்தான். (ஒருவர் இருக்கையில்தானே அமரமுடியும், இறக்கையில் உட்காரவைத்தாலும் படுக்கவேண்டியதுதான்).
பின்னர் அவனுடன் பணிபுரிந்துகொண்டிருந்த அவனது சில கீழ்நிலை ஊழியர்களும் அவனது உயர் அதிகாரிகளும் அவனைப்பற்றி மிகவும் உயர்வாகவும் சிறப்பாகவும் பேசினார்கள். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டான் "ஒரு ஊழியர் எவ்வளவு தான் வேண்டாதவராக இருப்பினும், அவர் பணிஓய்வு பெறும் ஒரு நாள் மட்டும், அவரது ஒரு குறையைக்கூட சொல்லாமல், அவரைப்பற்றி ரொம்ப நல்லவிதமாக பேசுவார்கள், புகழ்வார்கள். அந்தவிதத்தில் நானும் விதிவிலக்கல்ல".
மற்றவர்கள் பேசிமுடித்தபின் ராமச்சந்திரனுக்கு ஒரு ஷால் போர்த்தப்பட்டது. பெரிய மாலை ஒன்று அவன் கழுத்தில் போடப்பட்டது. ராமசந்திரன் நினைத்துக்கொண்டான் "வீட்டிற்குச் சென்றதும் நான் இந்த மாலையை ராஜி கழுத்தில் இட்டு மகிழ்வேன்" (ராஜீ அவன் அருமை மனைவி).
தொடர்ந்து அவனுக்கு ஒரு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டான் "இந்த அன்பளிப்பு அனேகமாக ஒரு கடவுளின் பொம்மையாகத்தான் இருக்கும். கணபதியா அல்லது திருப்பதி பாலாஜியா என்பதுதான் தெரியவில்லை".
(மாலை வீட்டில் சென்று அன்பளிப்பு பெட்டியைத்திறந்து பார்த்தபோது, ராமசந்திரன் நினைத்ததுபோலவே ஒரு அழகான கம்பீரமான ராஜஉடையுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஒரு கணபதி பொம்மையைத்தான் அன்பளிப்பாககொடுத்திருந்தார்கள்)
நிகழ்ச்சியின் கடைசி கட்டமாக ராமச்சந்திரன் உரை நிகழ்ந்தது. அவன் என்ன பேசினான் என்பதை அவன் வார்த்தைகள் வாயிலாகவே கேட்போமே.
“மேடையில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளே! என் முன் அமர்ந்திருக்கும் என் இனிய சக ஊழியர்களே!
இதற்கு முன் எவ்வளவோ பதவி ஓய்வு விழாக்களை என்னுடைய கடவுள் வாழ்த்துப்பாடல்களால் தொடங்கிவைத்திருக்கிறேன். இன்று என்னுடைய பதவி ஓய்வு அன்று, நமது அருமைச் சகோதரி ஸ்ரீதேவி கடவுள் வாழ்த்துக்கூறியது, மன்னிக்கவேண்டும், பாடியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நாளை மறுநாள் நம் எல்லோருக்கும் விடுமுறை நாளான ஞாயிறு. ஆனால் எனக்கோ இனி வரும் நாட்கள் யாவுமே ஞாயிறுதான். பணி செய்து ஓய்ந்து நான் இன்று பணிஓய்வு பெறவில்லை. மாறாக, பணி அதிகம் செய்யாமலேயே, ஓய்ந்து போகாமலேயே, உடல்ரீதியாக நான் ஐம்பதாகஇருந்தாலும், சான்றிதழின் பிரகாரம் அறுபதை எட்டியதால், பதவி ஓய்வு கொடுக்கப்படுகிறேன். முப்பத்திஐந்து வருடங்கள் நான் இந்த நிர்வாகத்தில் ஊழியனாக இருந்தேன் என்பதை நினைத்துப்பார்க்கையில் என்னால் நம்பமுடியவில்லை. எனது அலுவலக வாழ்க்கையில், எவ்வளவோ நல்லதும் கெட்டதும் எனக்கு நடந்தது. சிலவருடங்களாகவே நான் பதவியிலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்று
வித்துக்கொண்டிருந்தேன். வேறு ஒரு புதிய வேலையைத்தேடி போவதற்காக அல்ல. இந்த அலுவலக வாழ்வில் எனக்கு ஏற்பட்ட ஒருவகையான அதிருப்தி மற்றும் மனக்கசப்புகளே அதற்குக்காரணம். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வேலையிலிருந்து கட்டாய ஓய்வு வாங்கிகொள்ளப்போகிறேன் என்று என் மனைவியிடம் சொன்னபோது அவள் "நீங்கள் கட்டாய ஓய்வு எடுப்பதில் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லைதான். ஆனால், நமக்கு இரண்டு பிள்ளைகள், ஒருவனுக்கு சமீபத்தில்தான் வேலைகிடைத்து அலுவலகம் போய்வருகிறான். நம்முடைய இரண்டாவது மகனுக்கு சரியான வேலையோ, வாழும் வகையோ இன்னமும் அமையவில்லை. தவிர நான் வெளியே சென்று உத்தியோகம் பார்க்கவில்லை. வரும் காலங்களில் நமக்கு நிச்சயமாக நிதிசார்ந்த பொருளாதார பாதுகாப்புத் தேவை. இன்னும் இரண்டு வருடங்கள் நீங்கள் எப்படியாவது இந்தப்பணியில் இருந்துவிட்டால் உங்களுக்கு ஓய்வுநேர நிதி இன்னமும் கூடுதலாகக் கிடைக்கும். அதைக்கொண்டு நமது வருங்காலத்தை ஓரளவுக்கு நல்லமுறையில் அமைக்க வாய்ப்பிருக்கிறது. முப்பத்திமூன்று வருடங்கள் இந்த அலுவலகத்தில் இருந்துவிட்டீர்கள். கொஞ்சம் பல்லை கடித்துக்கொண்டு இன்னும் இரண்டு வருடங்கள் இந்தப்பணியைத் தொடருங்கள். நான் சொல்வது தவறு என்று உங்களுக்குப்பட்டால், நீங்கள் விரும்பியதுபோல கட்டாய ஓய்வுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்" என்று மிகவும் முதிர்ச்சி நிறைந்த அவளது அடக்கமான இனிய குரலில் தெரிவித்தாள். என்னை முப்பது வருடங்களாக உடனிருந்து மகிழ்ச்சியாக நான் வாழ உறுதுணையாய் இருக்கும் அவள் பேச்சுக்கு நான், அன்று கட்டுப்பட்டதால்தான் இன்று நான் கணிசமான ஒரு ஓய்வுத்தொகையுடன் பதவிஓய்வு பெறுகிறேன்.
(இதைக்கேட்டு அங்குள்ள ஊழியர்கள் பலத்த கரகோஷமிட்டனர். இப்படி ஒரு அறிக்கையை தனது கணவரிடம் எதிர்பார்க்காத, எதிரில் அமர்ந்திருந்த ராமச்சந்திரனின் மனைவி வியப்புடன் கணவனை நோக்கினாள்)
ராமச்சந்திரன் பேச்சைத்தொடர்ந்தான்.
“முப்பத்திஐந்து வருடங்கள் பணிபுரிந்த தொழில் நிறுவனத்தில் எனக்கு நல்லது கெட்டது என்று நான் வகைப்படுத்திய பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டுள்ளது. பல நல்ல நிகழ்வுகளையும் சம்பவங்களையும் நீங்கள் அறிவீர்கள். இப்போது நான் விவரிக்கவிருக்கும் மூன்று சம்பவங்கள் எப்படிப்பட்டவை என்பதை நீங்கள்தான் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.
முதல் சம்பவம்
சில வருடங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் என்பவர் நம் நிதித்துறையின் பொது மேலாளராகப் பொறுப்பேற்றார் என்பது நீங்கள் அறிந்ததே.
நான் என் வாழ்க்கையில் பணிபுரிந்த இரண்டு நிறுவனங்களிலும் மிகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தேன். என் அலுவலக வேலைகளை மிகவும் திறம்படச்செய்யவில்லை என்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் என் நேர்மையையும் நாணயத்தைமட்டும் ஒரு இம்மியளவு குறைகூறினாலும் சந்தேகித்தாலும் என்னால் அதைத் தாங்கமுடியாது. இதையும் நீங்கள் மிகவும் நன்றாக அறிவீர்கள். ஏனெனில் இந்தவிஷயத்தில் நீங்கள் என்னை நன்கு அறிவீர்கள்.
என்னுடைய சுபாவம் யாரிடமும் கூனிக்குறுகித்தழைந்து போகாமலிருப்பது. என்னை எவரேனும் அதிகம் கடிந்து பேசினால் நானும் பதிலுக்கு ஏதாவது சட்டென்று கூறிவிடுவேன். எனக்குப் பொறுமை கொஞ்சம் குறைவுதான். இந்தப் பொது மேலாளரோ, அவருக்குக்கீழே பணிபுரியும் அனைவரும் மரியாதை மட்டும் அல்ல அவருக்கு ஜால்ராவும் போடவேண்டும் என்று விரும்புபவர். என்னுடைய நகைச்சுவை மற்றும் நான் ஆங்கிலத்தில் படைத்த சில கவிதை போன்ற படைப்புகளை அவர் விரும்பினார்.
இருப்பினும், வேலை விஷயத்தில் அவர் என்னிடம் சில மாற்றங்களை எதிர்பார்த்தார். ஓரிரு முறை என்னை அழைத்து, நான் என் அலுவல் சம்பந்தப்பட்டக் கருத்துக்களைக் கோப்பில் எழுத்து வடிவத்தில் தருகையில் வளவளவென்று எழுதக்கூடாது என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், நான் அவரிடம், கொஞ்சம் வெளிப்படையாகவே நான் செய்வது சரியாகத்தான் இருக்கிறது என்று என் செயல்களை விட்டுக்கொடுக்காமல் பேசினேன். தனது கீழ்நிலை அதிகாரிகள் அவர் கூறும் அறிவுரையை ஏற்காமல் எதிர்த்துப்பேசுபவர்களை அவருக்குப் பிடிக்காது என்பதையும் அறிந்துகொண்டேன். ஆயினும் நான் என் வேலைகளை என் பாணியிலேயே செய்துவந்தேன்.
ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி என்னை அழைத்து "நீங்கள் இந்த துறையிலிருந்து உள்துறை தணிக்கை (internal audit துறைக்கு மாற்றப்படுகிறீர்கள்" என்றார். அடுத்த நாளே எனக்கு அலுவலக ஆணை கிடைத்தது. நான் நிதித்துறையிலிருந்து உள்துறை தணிக்கை துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எங்களது நிறுவனத்தில் பொதுவான கருத்து என்னவென்றால் நிதித்துறையின் மேலதிகாரிக்கோ அல்லது பொதுமேலாளருக்கோ ஒரு கீழ்நிலை ஊழியரையோ அதிகாரியையோ ஏதாவது ஒன்று அல்லது மேலான காரணங்களுக்காக பிடிக்கவில்லை என்றால் அந்த ஊழியர் அல்லது அதிகாரி உள்துறை தணிக்கை துறைக்கோ அல்லது வேறு ஊரில் உள்ள கிளைஅலுவலகத்திற்கோ மாற்றம் செய்யப்பட்டுவிடுவார். அதன்படி என்னை என் பொது மேலாளருக்குப்பிடிக்கவில்லை என்பதால் திடீரென்று எனக்கு வேறு துறைக்கு மாற்றல் கொடுத்துவிட்டார்கள்.
இந்த நிகழ்வு எனக்கு மிகவும் மனவருத்தத்தையும் அதிருப்தியையும் அளித்தது. அந்த நேரத்தில் நான், இந்த நிர்வாத்தில் இருபது வருடங்கள் பணி ஆற்றியிருந்தேன். ஒரு வார்த்தைகூட என்னிடம் கேட்காமல் வேறு ஒரு பிரிவுக்கு என்னை மாற்றியதை நான், இந்த நிர்வாகம் எனக்குப் புரிந்த மூன்றாவது அவதூறாகக் கருதுகிறேன். மற்ற இரண்டு அவதூறுகள் என்ன என்று நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள். அவற்றையும் இப்போது கூறுகிறேன்.
இரண்டாவது சம்பவம்
அடுத்து, எனது நேர்மையை என் நிர்வாகம் சந்தேகம் கொள்ளும் ஒரு சம்பவம். என்னுடைய நேர்மை மற்றும் நாணயத்தைப்பற்றி மிகவும் தெளிவாக ஏற்கெனவே மேலே குறிப்பிட்டுள்ளேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, என் நாணயத்தை சந்தேகித்து எனது நிர்வாகம் எனக்கு ஒரு குறிப்பாணை (memo) கொடுத்தது. என் நாணயத்தின் மேல் அனைவரும் வைத்திருந்த மரியாதையாலும் மதிப்பாலும். என் துறையிலிருந்த எவராலும் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை நம்பமுடியவில்லை.
நமது நிர்வாகத்தின் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு, நிர்வாத்திலிருந்து சில பொருட்கள் அதற்குரிய தொகையை ஒப்பந்ததாரர் விலைபட்டியலிலிருந்து வசூல் செய்யும் நிபந்தனையுடன் கொடுக்கப்பட்டது. அப்படி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட பொருட்கள் வழங்கிய ஆவணத்தில் பிரதி பொது முகாமையாளர் (Deputy general manager) கையெழுத்துக்குப் பதில் ஒரு மூத்த மேலாளர் (senior manager) கையெழுத்து இட்டுவிட்டார் என்பது தான் நான் செய்த பிழை. இந்த பிழைக்காகவே எனக்கு மேற்குறிப்பிட்ட மெமோ கொடுக்கப்பட்டதாக அந்த மேமோவிலே தெரிவிக்கப்பட்டது.
அந்த மெமோவுக்கு நான் நிர்வாகத்திற்கு அளித்த பதிலில் " பிரதி பொது முகாமையாளர் போலவே மூத்த மேலாளரும் ஒரு பொறுப்புள்ள நிர்வாக அதிகாரி என்பதால் அவரது கையொப்பத்தின் அடிப்படையில் நான் ஒப்பந்ததாரருக்கு பொருள் கொடுத்த ஆவணத்தை, எனது கீழ் பணிபுரிந்த மேற்பார்வையாளரின் பரிசீலனைக்குப்பிறகுதான், அதை ஏற்றுக்கொண்டு விலைப்பட்டியல் ஆர்டர் பாஸ் செய்தேன்".
அதன் பின்னர் மூன்று மாதங்கள் கழித்து என்னுடைய மெமோவை நிர்வாகம் தள்ளுபடி செய்தது. ஆயினும் நான் சிறிதும் எதிர்பாராத இந்த நிர்வாகத்தின் நடவடிக்கை என்னை மிகவும் நிலைகொள்ளச்செய்தது. இதுவும் எனது நெஞ்சை வாட்டிய ஒரு கெட்ட அனுபவம். இப்போது மூன்றாவது சம்பவத்தையும் சொல்கிறேன்.
மூன்றாவது சம்பவம்
இன்னொன்று நானும் என் கீழ்நிலை ஊழியர் ஒருவரும், அறியாமல் தெரியாமல் எந்த ஒரு தீய எண்ணமும் இல்லாமல் செய்த ஒரு தவறுதலால், ஒரு வேலை ஒப்பந்ததாருக்கு (works contractor) ஒரு லட்சம் ரூபாய் முன் வைப்புத்தொகையை (EMD) திருப்பி கொடுக்கக்கூடாது என்கிற ஆவணத்தை, அவருக்கு அந்தத்தொகையை திருப்பித்தரவேண்டும் என்று புரிந்துகொண்டு அந்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்சம் ரூபாயை கொடுக்க 'செலுத்தும் உத்தரவு' கொடுத்துவிட்டோம். நான் குறிப்பிட்ட இந்த ஆவணம் பார்க்கையில், தேர்வுபெறாத ஒப்பந்தக்காரர்களுக்கு முன் தொகையை திருப்பித்தரும் ஆவணத்தைப்போலவே இருக்கும். தேர்வு பெறாத ஒரு ஒப்பந்தக்காரருக்கு அவர் செலுத்திய முன்தொகையைத்திருப்பி தரவேண்டாம் என்கிற ஆவணத்தை நானும் என் கீழ்நிலை அதிகாரியும் அதுவரை பார்த்ததில்லை. அந்த ஆவணத்தில் சிறிதாக அச்சடிக்கப்பட்ட " refund / forfeit " (முன்பணத்தை திருப்பி கொடுக்கலாம்/ முன்பணம் பறிமுதல் செய்யவேண்டும்) என்ற பதங்களில் refund க்கு மேல் ஒரு சின்ன அடித்தல் இருந்ததை நானோ என் கீழ்நிலை அதிகாரியோ கவனிக்கவில்லை.
வெளிநபர் ஒருவர் ஏற்கெனவே நிர்வாகத்திற்கு முன்பணத்தை கட்டிவிட்டார். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அவருக்கு அந்த முன்தொகையை மீண்டும் திருப்பித்தரக்கூடாது என்று சம்பந்தப்பட்ட நிதித்துறைப் பிரிவினருக்கு எச்சரிக்கை செய்ய 'அத்தகைய பணத்தை திருப்பித்தரும் ஆவணத்தை போலவே உள்ள ஆவணம் நிச்சயம் தேவையே இல்லை'. ஒரு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக அந்த முன்பணத்தை குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்குத்தரவேண்டாம் என்று குறிப்பிட்டால் அதுவே போதுமானது. எங்கள் இருவருடைய போதாதா காலம், நாங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணத்தை, பணத்தை திருப்பித்தரும் ஆவணம் என்று ஒருதுளி சந்தேகமும் இல்லாமல் நினைத்து அந்த ஒப்பந்ததாரருக்கு அவரது ரூபாய் ஒருலட்சம் பணத்தை அவருக்குத் திருப்பித்தரும் பாஸ் ஆர்டர் போட்டுவிட்டோம்.
இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப்பிறகு, எங்கள் உள்துறை தணிக்கை துறையில் என்னை அழைத்து 'நாங்கள் வழக்கமாகச்செய்யும் 'செலவுகள் செய்த ஆவணங்கள்' சோதனையில் ஒரு பிறழ்ச்சியை (deviation) கவனித்தோம்.நீங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு கொடுக்கவேண்டாம் என்று குறிப்பிடும் ஆவணத்தை கொடுக்கவேண்டும் என்கிற ஆவணமாக எடுத்துக்கொண்டு, அவருக்குத் தவறுதலாக ரூபாய் ஒரு லட்சத்தை கொடுக்க ‘செலுத்தும் உத்தரவு' (pass order) கொடுத்ததன் பேரில், காசோலைத் துறையும் அந்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாயை செலுத்திவிட்டார்கள். இதற்கு நீங்கள் காரணம் கூற முடியுமா? என்று கேட்டபோது, எனக்கும் என் கீழ்நிலை அதிகரிக்கும் பக்கென்று இருந்தது. என்னால் அதை நம்பவே முடியவில்லை. நாங்கள் இருவரும் உள்துறை தணிக்கை பிரிவிற்கு நடந்தவற்றை முழுவதுமாக தெரிவித்தோம். உள்துறை தணிக்கை மேலாளர் என்னிடம் "இதை உங்களது மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். உங்களது நாணயம் மற்றும் நேர்மையை பற்றி நான் அறிவேன். எனவே இந்த விஷயத்தில் நாங்கள் புகார் பத்திரமும் கொடுக்கமாட்டோம். நீங்கள் நன்கு ஆலோசித்து என்னசெய்யவேண்டும் என்று முடிவு செய்யுங்கள்" என்று சொன்னபோது ஒரு பக்கம் பீதி அடைந்த என் மனது இன்னொருபக்கம் என்மீது பிறர் வைத்திருந்த நம்பிக்கையைக்கண்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தது.
நான் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இந்த விஷயத்தைப்பற்றி கூறி அந்த ஒப்பந்தக்காரருக்கு உடனடியாக ஒரு கடிதம் எழுதி, அவருக்குத் தவறுதலாகச் செலுத்திய ரூபாய் ஒரு லட்சத்தை நிர்வாகத்திற்கு உடனடியாகத்திருப்பி செலுத்தும்படி சொன்னதை அந்த அதிகாரிகளும் உடனடியாகச்செய்தார்கள். இருப்பினும் ஒப்பந்ததாரரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அவர் பணத்தையும் செலுத்தவில்லை. அந்த ஒப்பந்ததாரரின் தொலைபேசி எண்ணை வாங்கி நானே அந்த ஒப்பந்ததாரருடன் பேசினேன். அப்போது அவர் எனக்கு ஒரு திடுக்கிடும் தகவலைச்சொன்னார்.
இந்த ஒப்பந்தக்காரர் ஒப்புக்கொண்ட வேலை 95% கைமுறை வேலை (labour oriented works) 5 % பொருட்கள் சம்பந்தப்பட்டது. அதன் காரணமாக அந்த வேலையைச் செய்ய தினமும் எவ்வளவு தொழிலாளர்கள் தேவை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த வேலையைச் செய்வதற்கான திறமைப்பிரிவையும் ( unskilled labor ) கருத்தில் கொண்டு, அதன்படி, தொழிலாளர்களுக்குத்தரவேண்டிய குறைந்தபட்ச தினசரி சம்பளத்தையும் எண்ணத்தில் கொண்டு, ஒரு நாளில் செய்யவேண்டிய வேலையை ஒரு அலகாகக் கொண்டு ஒரு அலகு (unit வேலைக்கு ரூபாய் 2250 (இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது) என்று தீர்மானித்து அவர் நினைத்த தொகை தட்டெழுத்துனரின் தவறுதலால், நிர்வாகத்திற்குக்கொடுத்த கடிதத்தில், ஒரு அலகு ரூபாய் 22.50 என்று எண்களின்கீழ் குறிப்பிடப்பட்டு ஆனால் எழுத்துக்களில் 'இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது' என்று சரியாககுறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும் ஒரு அலகு ரூபாய் 22.50 என்று தவறாக தட்டெழுத்துனரின் கவனக்குறைவால் நிகழ்ந்த தவற்றை ஒப்பந்ததாரரும் பார்க்காமல் அந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுவிட்டார். இந்த ஆவணம் அடங்கிய தபால் எங்கள் நிர்வாகத்தில் திறக்கப்பட்டு பார்த்தபோது, அதை பரிசீலித்தவர்கள் ஒரு அலகு வேலையின் விலை ரூபாய் 22.50 என்பதையே (அதாவது ஐந்து வேலையாட்கள் ஒரு நாள் முழுதும், அதாவது எட்டு மணி நேரம் செய்யும் வேலைக்கு, ஒப்பந்ததாரர் குறிப்பிடும் தொகையாக எடுத்துக்கொண்டு, அதே வேலையை எடுத்துச்செய்ய விருப்பம் தெரிவித்திருந்த மற்ற ஒப்பந்ததாரர்களின் தொகையை பார்க்கும்போது மிகவும் குறைந்த தொகையான ஒரு அலகு ரூபாய் 22.50 ஐ தேர்வு செய்து, அதன்படி அந்த ஒப்பந்ததாரருக்கு வேலையை அளித்து, அது சம்பந்தப்பட்ட கடிதத்தையும் அவருக்கு அனுப்பிவிட்டார்கள். இந்த வேலைக்காக ஐந்து வேலையாட்களை தினமும் அமர்த்தி வேலைவாங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச தினசரி கூலியாக ரூபாய் 400 ஐ கொடுக்கவேண்டும். அதுவே தினசரி ரூபாய் 2000 (இரண்டாயிரம் ரூபாய்) ஆகிறது. அப்படி இருக்கையில், எப்படி ஐந்து தொழிலாளர்கள் தேவைப்படும் ஒரு அலகு வேலைக்கு ரூபாய் 22.50 (இருபத்தியிரண்டு ரூபாய் ஐம்பது பைசா) என்று குறிப்பிட்டுக் கேட்கமுடியும்? எண்களில் (தட்டெழுத்துப்பிழை காரணமாக) தவறாக குறிப்பிட்டிருந்தாலும், வார்த்தைகளில் ரூபாய் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது என்பதைச்சரியாகத்தான் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இவற்றை கூறிவிட்டு அந்த ஒப்பந்தக்காரர் என்னிடம் சொன்னார் "இப்போது சொல்லுங்கள், நான் இந்த அடிமட்ட விலைக்கு எப்படி அந்த வேலையைச்செய்யமுடியும். எனவே, நீங்கள் தவறுதலாக எனக்குக் கொடுத்த தொகை, எனக்குச் சேரவேண்டிய நியாயமான பணம்தான். அதை நான் ஏன் மீண்டும் உங்களுக்குத் திருப்பி தரவேண்டும்." என்று சொல்லிவிட்டு " இனி என் வாழ்க்கையில் உங்கள் நிர்வாகத்துடன் ஒரு சம்மந்தமும் வைத்துக்கொள்ளமாட்டேன்" என்று முடித்தார்.
அடுத்தகட்ட ஆபத்துக்கால நடவடிக்கையாக நான் என்னுடைய உதவியாளருடன் இதுகுறித்து பேசினேன். "நாம் மனதில் ஒரு இம்மியளவும் தீய எண்ணம் கொள்ளாமல் சற்று கவனக்குறைவு காரணமாக, இந்த ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்படக்கூடாது என்கிற ஆவணத்தை தவராகபுரிந்துகொண்டு அவருக்கு ரூபாய் ஒரு லட்சம் கிடைக்க காரணமாகிவிட்டோம். நிர்வாகத்தின் கோணத்தில் நாம் செய்தது பெருந்தவறு. எனவே நாம் இருவரும் தலா ரூபாய் ஐம்பதாயிரம் நம் சொந்தப்பணத்தைப்போட்டு ரூபாய் ஒருலட்சத்தை, அந்த ஒப்பந்ததாரரே திருப்பி கொடுத்துவிட்டதுபோல் செலுத்திவிடுவோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்".
பாவம், என் உதவியாளரும் மிகவும் நேர்மையும் நாணயமும் நிறைந்தவர். ஒரு நாள் யோசனை செய்தபின் என்னிடம் அவர் "நான் என் பங்கான ரூபாய் 50000ஐ செலுத்துகிறேன்" என்றார். நானும் எனது சொந்தப்பணம் ரூபாய் ஐம்பதாயிரத்தை போட்டு, ரூபாய் ஒரு லட்சத்திற்கு நிர்வாகத்தின் பெயரில் வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்து, நிர்வாகத்தின் காசோலைப்பிரிவில் செலுத்திவிட்டோம். அந்த விஷயத்தை உள்துறை கணிப்பு பிரிவுக்கும் தெரிவித்துவிட்டோம். அங்குள்ள அதிகாரிகள் எங்களது செயலைக்கண்டு வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். அதுமட்டுமின்றி எங்கள் இருவரின் சொந்தப் பணம் இப்படி அநியாயமாக கரைந்துவிட்டதே என்று வேதனையும் கொண்டனர்.
அதே நேரத்தில் உள்துறை கணிப்பு பிரிவு, சம்பந்தப்பட்ட துறைக்கும் மற்ற துறைகளுக்கும் ஒரு அலுவலக சுற்றறிக்கையை வெளியிட்டனர். அதில் குறிப்பிடப்பட்ட விஷயத்தின் சாராம்சம் இதுதான். "பொதுவாக ஒப்பந்ததாரர்கள் முன்பாகவே செலுத்திய முன்வைப்புத்தொகை அவர்களின் டென்டெர் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவருக்கு திருப்பி அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஒப்பந்ததாரர் செலுத்திய முன்வைப்புத்தொகையை பறிமுதல் (forfeit) செய்யவேண்டும் என்றிருந்தால், அதனை ஒரு கடிதத்தின் மூலம் மற்றும் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். தற்போது முன்தொகையை திருப்பி அளிக்க உபயோகப்படுத்தப்படும் வடிவம் மாற்றி அமைக்கப்படவேண்டும். அந்த வடிவத்தில் முன்தொகையை ஒப்பந்ததாரருக்கு திருப்பிக்கொடுக்கும் காரியம் மட்டுமே செயல்படுத்தப்படவேண்டும். ஆவணத்தின் வடிவம் ஒரேமாதிரியாக இருப்பதால், நிதித்துறையில் பணிபுரிபவர் இதனால் தவறுதலாக முன்தொகையை, அத்தொகையைப்பறிமுதல் செய்வதற்குப்பதிலாக, ஒப்பந்ததாரருக்கு அத்தொகையை திருப்பி கொடுத்திடவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேற்கூறிய ஆலோசனையை செயல்படுத்தினால் இத்தகைய தவறுகள் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைத் தவிர்க்கலாம்." அன்றிலிருந்து இந்த சுற்றறிக்கையின் ஆலோசனை நடைமுறைக்குவந்தது.
ஒப்பந்தக்காரர் கூறியது உண்மைதான் என்பதையும் நான் வேறு துறைக்குச்சென்று சம்பந்தப்பட்டக் கோப்புகளில் உள்ள ஆவணங்களிலிருந்து அறிந்துகொண்டேன். அதன்படி நம் நிர்வாகம் செய்த செயல் நேர்மையற்றது நியாயமற்றது சட்டத்திற்கு புறம்பானது என்றும் விளங்கியது. நான் இந்தக் கடும் வார்த்தைகளைச் சொல்வதற்காக நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இந்த விஷயத்தை நான் நிதித்துறையின் பெரிய ஒரு அதிகாரிடம் சென்று விளக்கியபோது அவர் "ராமச்சந்திரன், நீங்கள் கூறுவது ஒருவகையில் சரிதான். ஆனாலும் இப்போது நான் அந்த ஒப்பந்ததாரருக்கு பணத்தை திருப்பித்தரும் ஆணையை பிறப்பிக்கமுடியாது. ஏற்கெனவே நீங்களும் தவறுதலாக இவருக்கு அந்தப் பணத்தை திருப்பி கொடுக்கக்காரணமாக இருந்துவிட்டீர்கள். இந்த நிலையில் புதிதாக இந்த விஷயத்தை மீண்டும் துவக்கினால் மிகவும் சர்சைக்குரியதாகப்போய்விடும். முடிந்தால், நீங்களும் உங்கள் உதவியாளரும் சேர்ந்து அந்த ஒப்பந்தக்காரருடன் பேசி, இழந்த ரூபாய் ஒரு லட்சத்தை மீண்டும் கேளுங்கள். இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை" என்று திட்டவட்டமாகக்கூறிவிட்டார். இதுதான் இந்த நிர்வாகத்தின் நான் அனுபவித்த மூன்றாவது சித்திரவதை.
இத்தகைய அனுபவங்கள் நடந்து அதன் பின்னரும் பதினைந்து வருடங்கள் இந்த நிர்வாகத்தில் நான் தொடர்ந்து நீடித்து பணிபுரிந்தேன் என்பது எனக்கு வியப்புகலந்த வேதனையைத் தருகிறது. இவை அனைத்தையும் தாண்டி, இந்த பதினைந்து வருடங்களில் எனக்கு நான்கு முறை நிர்வாகம் பதவி உயர்வுகளைக்கொடுத்தது. மிகவும் பொறுப்புள்ள ஒரு உயர்ந்த அதிகாரியாகத்தான் நான் இன்று பதவி ஓய்வு பெறுகிறேன்.
இருப்பினும், இந்த பதினைந்து வருடங்கள், மனதார என் உண்மையான உயர்ந்த ஒத்துழைப்பை நிர்வாகத்திற்கு நான் கொடுக்கவில்லை அல்லது கொடுக்கமுடியவில்லை. சொல்லப்போனால், இந்த நிர்வாகம் எனக்கு இழைத்த மேற்கூறிய காரணங்களுக்காக, அது பட்ட கடனைக், கடந்த பதினைந்து ஆண்டுகளாக எனக்குச்செலுத்தி வந்திருப்பதாக நான் நினைக்கிறன். நான் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், மாதாமாதம் சம்பளத்தைத் தவறாமல் வழங்கி, நான்கு முறை பதவி உயர்வுகளையும் (இந்த நான்கு பதவி உயர்வுகளில் பதவி ஓய்வு ஒன்றிய பதவி உயர்வும் அடங்கும்) அள்ளிக்கொடுத்து, நான் நிர்வாகத்தின் மூலம் வெளியே வேறு ஒரு நிர்வாகத்திற்குச் சென்று இரண்டு வருடங்கள் (அதிக சம்பளத்துடன்) அந்த நிர்வாகத்தின் நிதித்துறை தலைவராக இருக்க வழிசெய்து, இன்று எனக்குச் சேரவேண்டிய எனது ஓய்வு நலன்களை (retirement benefits) ஏற்பாடு செய்து, என் பதவி ஓய்வு நாளில் இப்படிப்பட்ட ஒரு விழாவினை ஏற்பாடு செய்து, மாலையும் அன்பளிப்புடன் என்னை வழியனுப்புவதன் மூலம் அதன் கடனை எனக்குத் திருப்பி அளித்துள்ளது.
நான் தெரிந்தும் தெரியாமலும் உங்கள் எவருக்கேனும் ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால், உங்களிடம் கோபப்பட்டு உங்களை கடிந்துகொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கைகளால் மட்டும் செய்கின்ற ஒரு சின்ன உடற்பயிற்சியை ஓரிரு நிமிடங்களில் உங்களுக்குச் செய்துகாட்டிவிட்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன்.
(கைகள் இரண்டையும் சேர்த்துக் கெட்டியாகாதத் தட்டுதல், புறங்கைகளின் மேல் இன்னொரு கையால் அழுத்தி தட்டுதல், இரண்டு கைகளின் விரல்களைக்கொண்டு இன்னொருகையின் விரல்கள் இடையில் சேர்த்து தட்டுதல், இரு உள்ளங்கைகளின் கீழ்புறத்தை சேர்த்து தட்டுதல், இரண்டு உள்ளங்கைகளையும் மேற்புறம் காட்டியவண்ணம் கையால் செங்கலை உடைப்பதுபோல் சேர்த்து தட்டுதல், அதைப்போல இரண்டு கை மணிக்கட்டில் மற்றும் இடது வலது தோள்பட்டையின் ஓரங்களில் கெட்டியாக தட்டுதல், அதைப்போலவே கழுத்துக்குபின்புறம் இருபக்கமும் கைகளால் தட்டுதல், இரு கன்னங்களையும் தட்டுதல், தலைமேல் லேசாக கைகளால் தட்டுதல் போன்ற எளிய பயிற்சியை ராமசந்திரன் செய்துகாட்டினான்)
ஒவ்வொரு பகுதியிலும் இருபது தடவை தட்டவேண்டும். இது மிகவும் எளிய பயிற்சி, இதைச்செய்ய ஐந்து மூன்று நிமிடங்கள் கூட ஆகாது என்பதால் தினமும் எதாவது ஒரு வேளையில் இந்த பயிற்சியை செய்யுங்கள். கைதட்டுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராக நன்றாக இருக்கும் என்பதை மருத்துவர் கூறுவதையும் நாம் அறிவோம். இந்த எளிய பயிற்சியைத்தவிர நான் உங்களுக்கு மேலும் இரண்டு விஷயங்களை, உங்களால் முடிந்த அளவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்று மூச்சுப் பயிற்சி, இன்னொன்று சில நேரம், தனிமையில் அமர்ந்திருப்பது. எவ்வளவு நேரம் முடியுமோ, பத்து, இருபது முப்பது நிமிடங்கள் நீங்கள் தனிமையில் அமர்ந்துகொள்ளுங்கள். இவைகளை முடிந்தவரை வயிறு நிரம்பி இருக்கும்போது செய்யாமல் இருக்கவேண்டும். அவ்வளவே, மற்றபடி எப்போது செய்யவேண்டும், எவ்வளவு முறை செய்யவேண்டும் என்பதையெல்லாம் நான் உங்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன். கூடியமட்டில் இவைகளை தினசரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
இந்தச் சிறிய ஆலோசனையுடன் இந்த அலுவலகத்தையும் உங்களையும் கூட விட்டுவிடுகிறேன்.
(ராமசந்திரன் கடைசி வரிகளைச் சிரித்துக்கொண்டே கூறினான்).
நீங்கள் அனைவரும் இந்த நிர்வாகத்தில் இன்னும் சிறப்புடன் பணியாற்றி, நிர்வாகத்தின் வளமையையும் செழுமையையும் மென்மேலும் உயர்த்தவேண்டும், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்துடன் நல்ல உடல் மன ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இப்போது என் குடும்ப உறுப்பினர்களுடன் உங்களிடமிருந்து பிரியாவிடை பெறுகிறேன்"
****
பார்த்தீர்களா, கேட்டீர்களா இந்த ராமச்சந்திரனின் உணர்வுபூர்வமான பேச்சை. நம் ஒவ்வொருவருக்கும்கூட நம் நிர்வாகத்திலோ அல்லது நாம் செய்யும் தொழிலிலோ, மேற்கூறியது போலவோ அல்லது வேறு விதமான பிரச்சனைகளோ நிச்சயம் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படக்கூடும். அத்தகைய எதிர்மறையான விஷயங்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது அவரவரின் குணாதிசயங்கள் மட்டும் இல்லாமல் அவருக்கு அமையும் நேரத்தைப்பொறுத்தும் அமைகிறது என்பதை என்னுடன் சேர்ந்து நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறன்.