மனதளவில் கைதியாய்

மனதளவில் கைதியாய்

எனக்கு மாலையில் இருந்தே குளிர் காய்ச்சல் வருவது போலாகி விட்டது. என்ன செய்வது? ஏதாவது செய்யலாமென்றால் மாதக்கடைசி, கையில் பத்து ரூபாய் கிடையாது. சரி கடன் கேட்கலாம்..! மூச், இன்னும் இரண்டு நாட்களில் சம்பளம் வந்து விடும், அதற்குள் ஏன் கடன் வாங்கவேண்டும்? இப்படி ஒரு சிந்தனை.
ஆனால் மனசும் உடம்பும் கேட்கமாட்டேனெங்கிறதே, உடம்புக்குள் ஒரு நடுக்கம் வந்து செல்கிறது, கடன் வாங்கினால்தான் என்ன? ஒரு பக்கம் மனசு இதெற்கெல்லாம் கடன் வாங்குவியா? என்று கேட்டது.
படுக்க போகும் முன் வழக்கமாய் செல்போனை எடுத்தேன். சே..மனம் சலிப்பாய் எடுத்து என்ன செய்ய? ஒரு பிரயோசனமில்லாமல். சலிப்பாய் அதை தூக்கி போட்டு விட்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை, அங்கும் இங்குமாய் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல், இரவு நெடு நேரம் கழித்தே தூக்கம் வந்தது.
காலையில் எழுந்திருக்கும் போதே காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு, உடல் முழுவதும் ஒரு சோர்வு, வலுக்கட்டாயமாய் இதிலிருந்து விடுபட கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தேன்.
வழியில் கல்லூரியில் படித்த நண்பன் ரமேஷ் தென்பட்டான், என்னடா நேத்து இராத்திரி இரண்டு மூணு முறை உன்னை கூப்பிட்டேன். சுவிட்ச் ஆப்னே வந்துச்சு, நீ சுவிட்ச் எல்லாம் ஆப் பண்ணற ஆளே இல்லையே, அப்படி எங்கதான் போயிருந்தே?
அவனிடம் உண்மையை சொல்ல தயக்கம், ஒரு வெட்கம் கூட வந்தது. ஏண்டா மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கறே, எதுக்குடா இந்த கஞ்சத்தனம்? இப்படி ஒரு அறிவுரையை சொல்ல ஆரம்பிப்பான். அதனால் சட்டென அவனை துண்டிக்க இராத்திரி ஒரு அர்ஜெண்ட் வேலை இருந்துச்சு, அதான்..
“வேலைக்கும் செல்லுக்கும்” என்னடா சம்பந்தம்?
இல்லைடா ஆப் பண்ணி வச்சிருந்தேன், சரி அதை விடு எதுக்கு என்னைய இராத்திரி கூப்பிட்டே?
“செகன்ட் ஷோ” ஏதாவது போலாமான்னு கேட்கத்தான்,
அடுத்த வாரம் பாத்துக்கலாம், இப்ப நான் கிளம்பட்டா? ஏதோ அவசரமாய் வேலை இருப்பது போல அங்கிருந்து கிளம்பினேன்.
அலுவலக வாசலில் கால் வைக்கும் முன் முன்னறையில் இருந்த ரிஷப்சனிஸ்ட் ரேகா பொரிந்தாள். ஏன் சார் இராத்திரி பாஸ் ரொம்ப நேரம் உங்களை கூப்பிட்டாராம், எங்க போயி தொலைஞ்சிங்க, அதுக்கப்புறம் என்னை கூப்பிட்டு உங்களை பத்தி, அரை மணி நேரம் ஒரு புராணம் பாடி, அப்புறம்தான் போனை வச்சாரு. எங்க வூட்டுக்காரரு என்னைய ஒரு மாதிரி பாக்கறாரு. ஏன் சார் இப்படி பண்ணறீங்க?
இது ஏதுடா வம்பு..! பாஸ் என்னைக்குமே கூப்பிடாத ஆளு, திடீருன்னு என்ன ஆச்சு? என் நிலைமை புரியாத மனுசன், மனம் சலிப்புக்கு போனாலும், ஐயோ அந்த ஆளுகிட்ட மண்டகப்படி வாங்கணுமே என்று மனதுக்குள் பதை பதைக்கத்தான் செய்தது.
சே..கடன் வாங்கி இந்த செலவை செய்யணுமான்னு நினைச்சதுக்கே இத்தனை பிரச்சினையா?
பாஸ் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு எங்கய்யா நேத்து இராத்திரி போய் தொலைஞ்சே? குமாருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பிச்சிடு, ஜீ பேயில அனுப்பிச்சிடு, நாளானக்கி சம்பளம் வந்ததும் கொடுத்துடறேன்.
இவன் சொந்த வேலைக்கு என் கிட்ட கடன் வாங்கறான், அதை கெளரவமா கேட்டு வாங்கறான், மனதுக்குள் நினைத்தாலும் வெளியில் ஓ.கே.பாஸ்,, சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
அப்பொழுதுதான் என் பிரச்சினை எனக்கு ஞாபகம் வந்தது, என்னிடமும் பணம் இல்லாதது. ஐயோ..சரின்னுட்டனே.. ரேகாவிடம் ஓடினேன். ப்ளீஸ் ப்ளீஸ்.. ஒரு ஆயிரம் ரூபாய் இந்த இந்த போனுக்கு பே பண்ணிடேன்.
ஆயிரம் ரூபாய் எங்கிட்ட இருக்குமான்னு தெரியலை, இருங்க பாக்கறேன், தன் செல்போனை எடுத்து சிறிது நேரம் நோண்டியவள் சரி நம்பரை கொடுங்க, வாங்கி பணம் அனுப்பினாள். அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி வந்தது.
எப்படித்தான் அலுவலகத்தில் பொழுதை ஓட்டினேனோ தெரியவில்லை, ஏதோ பறி கொடுத்தது போலவே மனம் சோர்ந்து போனது. உலகமே காணாமல் போய் நான் மட்டும் தன்னந்தனியனாய் நிற்பது போல உணர தொடங்கினேன்.
வீட்டுக்குள் நுழையும்போதே மனைவி கத்தினாள். எங்க போய் தொலைஞ்சிங்க? உங்க போனுக்கு உங்கம்மா கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்துட்டு அப்புறம் என்னைய கூப்பிட்டாங்க. நானே கம்பெனியில் டென்சன்ல இருக்கறப்ப, உங்கம்மா வேற, அவன் போனை எடுக்க மாட்டேங்கறான், நீ அவன் கிட்ட சொல்லிடு, வர்ற ஞாயித்துக்கிழமை ஊர்ல திருவிழா வருதுன்னு. க்கும்.. எனக்கு இது ரொம்ப முக்கியம்..இழுத்தாள்..
அந்த கோயில்ல பூசை பண்ணறவனே உங்கப்பந்தானடி இந்த வார்த்தை வேகமாக வெளி வர துடித்தது, என்றாலும் எனக்கிருந்த சோக மன நிலையில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்து விட்டேன்.
சே..எதுக்காக இவ்வளவு சிரமம்? பேசாம இவகிட்டயே ஒரு இருனூறு ரூபாய் இருக்குமான்னு கேட்டுடலாமா? வேண்டாம், இப்ப அதுதான் ரொம்ப முக்கியமா? என்று கேட்பாள். அவளுக்கென்றால் இந்த கேள்வியை நாம் கேட்டால் அவ்வளவுதான்..! ம் இருந்தது இருந்தோம், பல்லை கடிச்சுட்டு நாளைக்கு ஒரு நாள் சமாளிச்சுக்கலாம்.
மறு நாள் உண்மையாகவே காய்ச்சல் வந்து விட்டது, கை விரல்களில் கொஞ்சம் நடுக்கம் கூட கண்டது. என்னடா ஒரு மாதிரி இருக்கே ? இரண்டு மூணு பேரு கேட்டு விட்டார்கள். என்ன சொல்வது? என்ன மாப்ளே “ஸ்டேட்டஸ்” போட மறந்துட்டயா? இரண்டு நாளா காணோம். “பேஸ் புக்குலயும் ஏதாவது உளறுவியே” அதையும் காணோம், நக்கலாய் ஒருவன் சிரித்தபடி சொன்னான்.
அவன் மேல் கோபம் வரவில்லை, காரணம் நானே சோர்ந்து சுருண்டு போன நிலைமையில் இருந்தேன்.
இரவு ஏழு மணி இருக்கும், மனைவி உள்ளிருந்து கத்தினாள், ஏங்க உங்க போனுக்கு என்னாச்சு? உங்க பிரண்டு ராம்குமாரு பேசறாரு, இந்தாங்க, சுர்ரென்ற கோபத்துடன் அவள் போனை என் கையில் திணித்து விட்டு போனாள். பாவம் ஏதோ செல்போனில் பார்த்து கொண்டிருந்திருப்பாள் போல, மனதுக்குள் எண்ணியபடி போனை வாங்கி ஹலோ என்றேன்.
மாப்பிள்ளை சம்பளம் போட்டுட்டங்கடா, இப்பத்தான் அக்கவுண்ட்ல கிரிடிட்டு ஆச்சு, சொல்லி விட்டு போனை துண்டித்தான். “சம்பளம் போட்டுட்டாங்களா” அப்பாடி…! மனைவியிடம் இந்தா ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணிடு, என் போனுக்கு “இரு நூறு ரூபாய்க்கு ரீ சார்ஜ் பண்ணிடு” நீ பண்ணூனாத்தான் நான் உனக்கு என் போன்ல இருந்து ஜீ பே பண்ண முடியும்.
அவள் பிகு செய்து எப்படியோ என் போனுக்கு ரீ சார்ஜ் செய்யப்பட்டு என் போன் உயிர்ப்பித்து “நெட் சேவைகள்” காட்டியபின்புதான் என் காய்ச்சல் காணாமல் போனது. கை நடுக்கம் குறைந்து போனது. குரலில் ஒரு கம்பீரம் தானாக வந்தது.
“ஹலோ” கம்பீரமாய் வலுக்கட்டாயமாய் எவனோ ஒருவனுக்கு போன் செய்ய ஆரம்பித்தேன்.
“சே ரீ சார்ஜ் முடிஞ்சு போயி, அவன் “இன்கம்மிங் அவுட் கோயிங்” கட் பண்ணி தொலைச்சுட்டான், சரி ரீசார்ஜ் பண்ணாமல், இரண்டு நாளை சமாளிச்சுடலாமுன்னு நினைச்சதுக்கே” பைத்தியம் பிடிக்கறமாதிரி ஆகிப்போச்சே.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-May-23, 12:19 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 127

மேலே