சிறைப்பறவை
சிறைப்பறவை
க்ரீச்..கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் கண்ணை திறந்து பார்த்த முத்தழகி மெல்ல எழ முயற்சித்தாள். என்னாச்சு முத்தழகி இன்னைக்கு என்ன நாளுன்னு உனக்கு தெரியுமா? சிறை வார்டனான பெண் போலீஸ் உமா அவளிடம் கேட்டாள்.
மெல்ல சிரித்த முத்தழகி தலையாட்டினாள். என்ன மனசே இல்லாம தலையாட்டறே ! சரி சரி எழுந்து ரெடியாகு, அடுத்த கதவை திறந்து விட சென்றாள் உமா.
முத்தழகி எழும்போதே தலை சுற்றுவது போல் இருந்தது, தடுமாறினாலும் மெல்ல சுவற்றை பிடித்து கால்களை ஊன்றி நின்றாள். இந்த அறை இன்றுடன் இவளுக்கு விடை கொடுக்க தயாராகிவிட்டது. இவளுக்குத்தான் இதை விட்டு போவதற்கு மனமில்லை,
பதிமூன்று வருடங்களும் ஆறு மாதங்களுமாக இவளோடு ஒட்டி உறவாடி படுத்து புரண்டு கொண்டிருந்த அறை. இதே அறைக்குள் அவள் தள்ளப்படும்போது அவள் மனது பட்ட துயரம், வெறுமை, அழுகை. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைத்த இந்த அறை, அவளுடன் மனதுக்குள் ஒட்டி உறவாடி எல்லா கவலைகளையும் போக்க வைத்தது.
இவளோடு கைதியாய் அப்பொழுது இருந்த சாவித்திரி அவளை இரண்டு மூன்று நாட்கள் படாத பாடு படுத்தியதையும், இவளால் எதுவும் செய்ய முடியாமல் தனக்குள் அழுது கொண்டே காலையில் கைதிகள் பேரேடில் காவலர்கள் சொன்ன வேலையை செய்து கொண்டும் இருந்தாள். நாட்கள் செல்ல செல்ல சாவித்திரி என்ன நினைத்தாளோ இவளிடம் வருவதையே நிறுத்தி விட்டாள்.
அதற்கு பின் அவளுக்கு பிறகு வந்த கைதிகள் இவளை தனக்கு முன்னால் இருப்பவள் என்று ஒதுங்கி இருக்க ஆரம்பித்தார்கள். இவளும் சாவித்திரியை போன்ற குணங்களை காட்டாமல் அந்த அறைக்குள் தனக்கு ஒதுக்கியிருந்த இடத்திலேயே அமைதியாய் இருந்து விட்டாள்
இப்பொழுது சிறைச்சாலை இவளுக்கு பழகிய இடமாகவே ஆகிவிட்டது. காவலர்கள் இவளின் குணப்போக்கை கண்டு அதிகமாக இவளை கண்டு கொள்ளாமல் இருந்தனர். நாட்கள் செல்ல இவளுக்கு இது தண்டனைக்காக வந்துள்ள இடம் என்பதே மறந்து போய் தனக்குரிய இடமாகவே ஆகிப்போயிருந்தது.
என்ன குற்றம் செய்து நமக்கு இத்தனை வருடங்கள் இங்கு போட்டார்கள்? யோசித்து பார்த்தாள். ஹூம் ஞாபகம் வரவில்லை. கொலை குற்றம் என்றுதான் இவளுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதோ நின்று கொண்டிருக்கும் இந்த நிலையில் கூட நினைத்து பார்த்தால், தான் உண்மையில் எப்படி அந்த கொலையை செய்தோம், சிரிப்புத்தான் வந்தது, இவள் ஒப்புக்கொண்டதால் இந்த சட்டம் இவளை கொலை செய்தவள் என்று குற்றம் சாட்டி தண்டனை வழங்கி விட்டது. ஆனால் இவளது ஒரே மகன் விபத்தில்தான் இறந்தான் என்பதை சாட்சிகள் மூலம் நிருபணமாகி விட்டது என்று தீர்ப்பை சொல்லி இவள் குற்றம் சாட்டியவனை விடுதலை செய்து விட்டது.
இவள் கொலை செய்யும் அளவுக்கு தைரியமானவளா, இல்லை, ஆனால் மகனின் மரணம் இவளை அப்படி செய்ய எண்ணியது, ஆனால் போறாத வேலை தனி மரமாய் நின்ற அவளுக்காக யார் வாதாடுவது? இல்லை இவளுக்காக யார் வருத்தப்படுவது?
இந்த நகரத்துக்கு வரும்போது இவளுக்கு என்ன தெரியும்? பதினெட்டு பத்தொன்பது வயது கூட நிரம்பாதவளாய் சாலையில் பணி புரியும் தொழிலாளி ஒருவனுக்கு மனைவியாக ஒரு குடிசை கூட்டத்துக்குள் நுழைந்தவள். ஒரு மாதமோ இரண்டு மாதமோ தான் அந்த குடிசையில் அமைதியாக இருக்க முடிந்தது. அதற்கு பின்னால் அவளுக்கு கணவனாக வந்தவனின் குடிவெறியும் உதையும்தானே வாங்கிக்கொண்டு இருந்தாள்.
நாட்கள் செல்ல செல்ல இவள் கணவனின் கொடுமைகள் அளவுக்கு மீறித்தான் இருந்தன. மகன் வயிற்றில் ஆன பின்னாலும் இவனின் கொடுமைகள் குறையவே இல்லை.
இவளது நல்ல காலமோ என்னவோ திருமணமாகி ஐந்து வருடங்களிலே இவளின் கணவன் குடித்தே அழிந்தான். அதற்கு பின் தன் பையனை வைத்து கொண்டு குடிசைக்குள் தனித்து வாழ இவள் பட்ட கஷ்டம்..
அக்கம் பக்கம் சொல்லி கிடைத்த இடத்தில் வேலையை செய்து மகனை பதினைந்து வயதுக்கு கொண்டு வந்து விட்டாள். இதற்கு மேல் படிக்கமுடியாது என்று பத்தின் ஆரம்பத்திலேயே படிப்பை நிறுத்தி யாரிடமோ வேலைக்கு சேர்ந்து விட்டான்.
சில நாட்களாக மகனை கவனித்து கொண்டிருக்கிறாள். ஏதோ யோசனையில் இருப்பதும், அவனை பார்ப்பதற்காக நான்கைந்து பேர் அடிக்கடி வருவதும் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதும் இவனும் அப்பனை போல ஆகி விட்டானோ! என்னும் கவலையை இவளுக்குள் விதைத்தன.
இரவு நெடு நேரம் கழித்து வந்தவனை இவள் நிறுத்தி ஒரு பாட்டம் அழுது ஓய்ந்தாள். உங்கப்பனால நான் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல, இப்பத்தான் நிம்மதியா இருக்கேன், மறுபடி நீ உங்கப்பனாட்டம் ஆகிடாதே..
சிரித்தான், பயப்படாதே, அப்படி எல்லாம் ஆக மாட்டேன். எனக்கு ஒரு சில வேலை இருக்கு, அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும், சொல்லியவன் இவள் சாப்பிட கூப்பிட கூப்பிட களைப்பா இருக்குன்னு போய் படுத்து விட்டான்.
ஒன்றிரண்டு மாதங்கள் ஓடியபின்னால் ஒரு நாள் இவன் நண்பன் ஒருவன் வந்து இவளிடம் சுப்புவை போலீஸ் கைது பண்ணிடுச்சாம், செய்தி சொன்ன போது இவள் அதை வாங்கி கொண்ட விதம். அப்படியே பிரமை பிடித்து போய் நின்று விட்டாள்
ஐயோ கடவுளே..சுய நினைவு வந்து காவல்துறையிடம் ஓடிய போதுதான் அவளுக்கு தெரிந்தது, மகன் சில வேலைகள் என்று சொன்னதில் ஒரு கொலை முயற்சியும் உண்டு என்று.
இயக்கமொன்றில் உன் பையன் தீவிரமாயிருக்கான், இந்த ஊர்ல இருக்கற பெரிய மனுசனை கொல்ல முயற்சி பண்ணியிருக்கான், அந்த ஏட்டையா மிரட்டலாய் சொன்னாலும் நீண்ட நாட்களாக அவளை கவனித்து வந்ததால் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொண்டார்.
இங்க பாரு.. அவன் பெரிய மனுசனா காண்பிச்சாலும் உள்ளே பெரிய ரவுடி கூட்டத்தை வச்சிருக்கறவண்டா. பார்த்து பதனமா இருந்துக்க, உன்னைய மட்டுமில்லை உங்கம்மாவை கூட முடிச்சிடுவான், அவரது போதனைகளை வெறுமனே இவன் கேட்டு கொண்டிருந்தாலும் முத்தழகிக்கு இந்த செய்தி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
எப்படியோ யார் யார் காலையோ பிடித்து அவனை விடுவித்து வீட்டுக்கு கூட்டி வந்தவள், முடிந்தவரை பொறுமையாக ஏதேதோ சொன்னாள். அவனும் சரி சரி என்று தலையாட்டி விட்டுத்தான் சென்றான். ஒரு வாரத்திற்குள் அவன் சாலையோரம் அடிபட்டு கிடந்தான்.
விபத்து என்று வழக்கை முடித்து விட்டார்கள். அப்பொழுது இவளுக்கு உதவி செய்த பத்திருபது இளைஞர்கள்தான் அடித்து சொன்னார்கள். இது அந்த பெரிய மனிதனின் கைவரிசைதான் என்று. இவன் இயக்கத்தின் சார்பாக நிறைய முறை அவனது அடாவடி செயல்களை தடுத்திருக்கிறான். இது கொஞ்சம் கொஞ்சமாக விரோதமாகி இப்படி ஒரு முடிவை இவனுக்கு கொடுத்து விட்டது.
எந்த பின்புலமும் இல்லாமல் வறுமையுடனே இருந்த முத்தழகியினால் அவனை எதிர்த்து என்னதான் செய்யமுடியும்? மகன் இறந்து போனவன் போனவன்தானே !. தனிமையாய் அந்த குடிசைக்குள் மகனின் உடைகளை அணைத்து கொண்டு கிடந்தாள்.
அக்கம் பக்கம் குடிசையில் இருந்த பெண்கள் அவள் மனதை திருப்ப வெளி வேலைக்கு கூட்டி போனார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறியவள் போல் இருந்தாள் முத்தழகி.
ஆறு மாதங்கள் ஓடியிருந்தது. மகன் கொலை செய்ய முயற்சித்ததாக சொல்லப்பட்ட அந்த பெரிய மனுஷன் திடீரென உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏகப்பட்ட செலவுகள் செய்தும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டான். அவனது ஆட்களால் கலவரம் உருவாக்கப்பட்டு அந்த ஏரியாவே அல்லோகப்பட்டது. மிகப்பெரிய ரவுடி கூட்டத்தை வைத்திருந்தவன், அரசியல்வாதிகளை தன் கைக்குள் வைத்திருந்தவன் இறந்துவிட்டான் என்றால் அந்த ஏரியா அமைதியாக இருக்க முடியுமா? இருக்கத்தான் விடுவார்களா அவனை சுற்றி இருப்பவர்கள். எல்லா கடைகளையும் அடைத்து பெரிய ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்கள் இவைகளை நடத்தி கொண்டிருந்தனர் அந்த ஏரியாவில். குடிசையில் படுத்திருந்த முத்தழகி அன்று நிம்மதியாய் உறங்கினாள்.
அந்த பெரிய மனுஷனின் திடீர் மரணத்திற்கு காரணம் விஷம் அவன் உடலில் கலந்திருந்ததால்தான் என்று செய்தி வந்த பொழுது முத்தழகி காவல்துறையில் சரணடைந்திருந்தாள். தான்தான் அவனுக்கு விஷம் இட்டதாகவும், ஒரு திருமண விழாவில் இவன் கலந்து கொள்ள போகிறான் என்று கேள்விப்பட்டு அங்கு இருந்த சமையல் காண்ட்ராக்டரிடம் சமையல் உதவிக்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறாள். பந்தி பரிமாறும் நேரம் அந்த பெரிய மனுசனையே கவனித்து கொண்டிருந்தவள் அவனுக்கு என்று தான் கொண்டு வந்திருந்த விஷத்தை அவன் இலையில் பரிமாற செய்து விட்டாள்.
அதற்கு பின் வழக்கு வேகம் பிடித்து இவள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் பதினான்கு வருடங்கள் கொடுக்கப்பட்டு, இவளின் “நன்னடைத்தை” என்று சொல்லி பதிமூன்றாம் வருடம் ஆறாவது மாதத்திலேயே இதோ இன்று காலை விடுதலையாக போகிறாள்.
கையில் சுருட்டி பிடித்த பையொன்றும், இடுப்பில் அவளுக்கு அளித்திருந்த சிறைச்சாலையில் பணிபுரிந்த ஊதியப்பணம் முந்தானையில் முடியப்பட்டு அவளது இடுப்பில் சொருகியிருக்க, முகத்தில் வந்து மோதிய சூரிய வெளிச்சம் கண்களை கூச செய்ததால்,முகத்தை சுருக்கியபடி பரபரப்பாய் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த வண்டி வாகனங்களை பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறாள்.
இதுவரை அவளை காத்து வந்த சிறைச்சாலை அவளை கை கழுவி வெளியே தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் இருந்ததோ என்னவோ அதன் உச்சியில் பறந்து கொண்டிருந்த தேசியக்கொடி பட படபடவென அடித்தபடி பறந்து கொண்டிருந்தது.
அரசும் கைதி என்னும் நிலையில் இதுவரை இவளை காத்து வந்து,அப்பாடா அவளை காக்கும் பொறுப்பை இனி நம்முடையது அல்ல என்னும் நிம்மதியில், இப்பொழுது அவளை வெளியே துப்பி விட மீண்டும் அவள் அநாதையானாள்..!