தோல்வி எனக்கு ஒரு படிப்பினை

தோல்வி எனக்கு ஒரு படிப்பினை

என்னுடைய அம்மாவும் அப்பாவும் கேரள தேசத்தில் பிறந்து வளர்த்தவர்கள். அம்மா பாலக்காடு கிராமத்திலும் அப்பா அதை அடுத்துள்ள கொடுவாயூர் கிராமத்திலும் வசித்து வந்தனர்.அவர்களது திருமணம் சிறு வயதில் நடந்ததாக கூறுவார்கள்.அம்மா அப்பாவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தது திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என்பது என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அப்பா தன வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் பல வருடங்கள் குடி இருந்தனர்.அங்கு தான் என் மூத்த சகோதரர்கள் பிறந்தனர். பின் மேற்கு மாம்பலத்தில் ஒரு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு எல்லோரும் குடியேறினார்கள். அதன் பிறகு சொந்த வீட்டில் தான் நான் பிறந்தேன்.அம்மா நான் குழந்தையாக இருந்தபொழுது என்னிடம் நீ நம் சொந்த வீட்டில் பிறந்தாய் அதிர்ஷ்டம் உள்ளவன் என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.அப்பாவுக்கும் என்னிடம் மிகுந்த ஆசை யுண்டு.எப்பொழுதும் என்னிடம் விளையாடி கூடவே படுக்கையில் வைத்து தட்டி தூங்க வைப்பது வழக்கம்.
என் பெயர் சங்கரராமன் சங்கர் அல்லது ராம் என்று . என் பெயரை சுருக்கி அழைப்பது வழக்கமாகியது. .நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மாம்பலம் தான். மேற்கு மாம்பலம் மிகத் தாழ்வான பகுதி அதில் வெளியில் இருந்து கொண்டு வந்த மண்ணையும் குப்பைகளையும் கொட்டி அதை மேடாக்கியபின் அங்கு வீடுகள் கட்டப்பட்டன. அந்த காலத்திலும் இந்த காலத்திலும் மழை பெய்தால் அங்கு தண்ணீர் தேங்குவது வழக்கம்.மண்போட்டு உயர்த்த இடங்கள் மீண்டும் பள்ளமாகி அதில் குட்டை போல் தண்ணீர் நின்று அதனால் கொசுக்கள் வெகு வேகமாக உற்பத்தியாகி வீடுகளில் தொல்லை அளிக்கும்.கொசு இல்லாத நாட்கள் மிகக் குறைவு. உட்காரமுடியாது.கொசு வத்தி சுருள்,கொசுக்களை விரட்டும் களிம்பு ஆகியவைச் சிறிது உதவினாலும், எல்லோரும் மாம்பலம் என்றாலே முகம் சுளிப்பார்கள்..இப்பொழுது அந்த பகுதி மிக வசதிகளுடன் ஒரு வியாபார தலமாக உருமாறியுள்ளது. அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது.ஒரு ஊசி முனை நிலம் கூட வாங்க முடியாது. அங்கு வசிக்கும் குடும்பங்கள் மிகக் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.தாங்கள் நினைப்பது தான் சரி என்றும் அதைப் போல் ஒருவன் இல்லை என்றால் அவனைப் பற்றி பல தவறான செய்திகள் சில நிமிடங்களில் மாம்பலத்தில். எல்லோருக்கும் பரவிவிடும். இதை மனதில் வைத்துக் கொண்டு அங்கு வாழ்பவர்கள் மிகவும் கவனமாக எல்லோரிடமும் பழகுவார்கள். ஒருவர் இன்னொருவரை கண்டு பொறாமையால் குறைகூறுவதும், ஆண்கள் பெண்களுடன் பேசினால் அவர்களை பற்றி கதைகளைப் பரப்புவதும் அங்குள்ளவர்களுக்கு ஒரு பொழுது போக்கு.எனது பெற்றோர்கள் சிறிது முற்போக்கு சிந்தனை உடையவர்கள்.எங்கள் வீட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் பேசி கொண்டிருக்கலாம் உணவு சாப்பிட்டு பின் செல்லலாம். என் சகோதரர்களின் நண்பர்கள் சுதந்திரமாக வீட்டு சமையல் அறைக்கு வந்து அம்மாவிடம் என்ன தேவையோ அதைச் செய்ய சொல்லி உண்பது பின் செல்வது சகஜமாக நிகழும்.அண்ணா இல்லாத வேளையிலும் இது நடக்கும்.அம்மாவிற்கு எல்லோரும் தனது பிள்ளைகள் தான். நான் ஆரம்ப பள்ளி படிப்பை முடித்து விட்டு உயர் கல்விக்கு உயர் நிலை பள்ளிக்கு சென்றபின் வகுப்பில் ஆங்கில கல்விப்பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டேன்.முதலில் சிறிது தடுமாறினாலும் மெல்ல மெல்ல ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் கற்று தேர்வில் எழுத முடிந்தது. முதல் சில பரிட்சைகளில் பெரிய அளவில் மதிப்பெண்கள் வரவில்லை என் கூட படித்தவர்கள் என்னைவிட அதிகம் மதிப்பெண் பெரும் பொழுது ஆசிரியர் என் மதிப்பெண்ணை படிக்கும் வேளையில் அவர்கள் பார்க்கும் பார்வையில் நான் குன்றிப்போவேன் .அந்த தோல்வி என் மனதில் ஒரு வைராக்கியமாக மாறி எப்படியும் இவர்களை எல்லாம் ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்தையும் ஒரு உள்ளுணர்வையும் ஏற்படுத்தியது. கடைசி ஆண்டில் நான் பள்ளியிலேயே முதல் ஐந்து மதிப்பெண் வாங்கிய பட்டியலில் வந்து பெயர் படிக்கப்பட்டு பரிசு வாங்கிய பொழுது என்னுள் எதோ பெரிய சாதனை செய்த மனப்பான்மையை ஏற்படுத்தியது. என்னை பார்த்து நகைத்தவர்கள் இப்பொழுது தலை குனிய இருப்பதை பார்த்து உள்ளம் பூரித்தது. நான் உயர்நிலை பள்ளி படிப்பில் பரிசுகளுடன் தேர்ச்சி பெற்றதும் என் வீட்டில் எனக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.என் அண்ணா என்னிடம் மிகப் பிரியமாக பேசியதோடு அல்லாமல் நான் வெகுநாட்களாக ஆசை பட்டு கொண்டிருந்த மிதிவண்டியையும் பரிசாக கொடுத்தான். எல்லோரையும் விட அம்மாவிற்கு நான் நல்ல மதிப்பெண் பெற்று பரிசு வாங்கியதில் பெருமிதமும் மகிழ்ச்சியும்.தெரிந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டில் உள்ளோர்களை அழைத்து அவர்களிடம் இந்த செய்தியை சநதோஷம் மேலிடப் பகிர்ந்து கொண்டார். என் அண்ணா என்னுடன் கல்லூரிக்கு வந்து அங்கு சேரவேண்டிய படிப்பில் என் கூடப் பேசி முடிவெடுத்து என்னைச் சேர்த்து விட்டான்.நான் சேர்த்த கல்லூரி சென்னையில் பிரபலமான கிறுத்துவ கல்லூரி,அங்கு இடம் கிடைப்பது கடினம் என்று யாவரும் கூறி என்னை ஒரு பிரமிப்புடன் பார்த்த பொழுது நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து போனது. வெற்றியின் மதிப்பையும் அறிந்து கொண்டேன். நன்றாக படித்து கல்லூரியிலும் நல்ல மதிப்பெண் பெற்று வெளியே வந்தேன்.
அப்பாவின் நண்பர் வேலை செய்யும் ஒரு மருத்துவ பொருள் விற்கும் அலுவலகத்தில் தேர்வில் வெற்றி பெற்று வேலையும் கிடைத்தது. முதல் சிலநாட்கள் வேலை கடுமையாக இருந்தது.மருத்துவர்களை சந்தித்து அவர்கள் மூலம் எங்கள் கம்பெனியின் பொருள்களை விற்க வேண்டும். சில நாட்கள் இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்.அப்பாவும் அம்மாவும் நான் வரும்வரை முழித்துக் கொண்டு காத்திருப்பார்கள்.முதல் மாதம் சம்பளம் வந்தது அதை அம்மாவிடம் கொண்டு கொடுக்க அவள் கண்களில் பெருமையும் இன்பத்தின் உச்சத்தில் வரும் சிறு கண்ணீரையும் என்னால் என்றும் மறக்க முடியாது.அவளிடம் நான் இது எல்லாம் நீ எனக்குக் கொடுத்த ஊக்கம் தான் எனக் கூறுகையில் அவள் என் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள்.அப்பா தன் அன்பை என் கையை அழுத்தி பிடித்து அவரது வழியில் காட்டினார். வேலையில் சேர்ந்து வருடங்கள் ஓடியது. ஒரு முறை எல்லோருக்கும் நடுவில் என்னை ஒரு மருந்தை நான் எவ்வாறு விற்கிறேன் எனப்பேசிக் காட்ட சொன்னார்கள். நான் கூறியதில் ஒரு சிறு தவறு நேர்ந்ததாக மற்ற மாநிலத்தை சேர்ந்த ஒரு மருந்து விற்பவர் சுட்டிக் காட்டினார். மீண்டும் பள்ளியில் என் மதிப்பெண் படிக்கும் பொழுது வந்த அதே உணர்வு, எல்லோரும் என்னையே பெரிய தவறு செய்தவனை போல் பார்ப்பதாக.எனக்கு தோன்றியது. அதற்குள் என் மேனேஜர் அவன் விற்கும் இடங்களில் இந்த மருந்து நன்றாகவே விற்பனை ஆகிறது ஆகவே இந்த தவறினால் ஒன்றும் பாதிப்பு இல்லை எனக் கூறிட யாவரும் பிரிந்து சென்றனர்.என்னுள் இந்த நிகழ்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்திட நான் வீட்டில் சென்று எனக்கு வேலை செய்தது போதும் மேலே படிக்க வேண்டும் எனக் கூறி முதுநிலை படிப்பில் சேர்ந்து கொண்டேன். அங்கும் பல மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்னுடன் படிக்க,சில நேரங்களில் அவர்கள் என்னையே பார்ப்பது போலவும் என்னைப் பற்றி பேசுவது சிரிப்பது போலவும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு சில பாடங்களில் எனக்கு சிரமம் இருந்தது அவைகளில் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றிட மீண்டும் அந்த தோல்வி என்னை கீழே தள்ளி நகைத்தது.. அப்பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது ஒரு குரு தன் உபதேச வியாக்கியானத்தில் கூறியது தான். என் மனதில் அது ஆழப் பதிந்திருந்தது, நம்மை தோல்விகள் கீழே தள்ளுவது புதியதல்ல.நாம் எவ்வளவு முறை கீழே விழுந்தாலும் எவ்வாறு மீண்டும் எழுந்திருக்கிறோம் என்பது தான் நமது மனஉறுதியைக் காட்டும். எழுந்தபின் அந்த வீழ்ச்சியை பற்றி நினைக்காமல் வெற்றியைத் தேடி மற்றவர்களை பிரமிக்க வைக்கவேண்டும். உன்னை அது உயர்த்தவனாக்கி மற்றவர்களிடம் மதிப்பையும் பெற்றுத் தரும் . நான் அதை மனதில் இருத்திக் கொண்டு மிகக் கடுமையாக உழைத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றிபெற்று ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையும் பெற்றேன்.இந்த வேலைக்காக நான் பம்பாய் நகரத்தில் தங்க வேண்டியிருந்தது.அங்கு ஒரு சிறிய அறையில் தங்கி சமையல் செய்து அறையைச் சுத்தம் செய்து வாழ வேண்டி இருந்தது. வட மொழியையும் சிறிதளவு கற்றுக் கொண்டு வேலையில் சில நண்பர்களைப் பெற்று அவர்களின் உதவியுடன் வேலையில் வளர்ச்சியும் அடைத்தேன் .அம்மா அப்பா இருவருக்கும் நான் முன்னேறுவதைக் கண்டு மகிழ்ச்சி.வருடங்கள் பல ஓடிவிட்டது. அம்மாவையும் அப்பாவையும் வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் பார்க்க வரும் நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. அந்த நாட்களை நினைத்து மற்ற நாட்களை ஓட்டி விடுவேன்.வந்து விட்டு புறப்படும் அந்த நாள் ஒரு கடினமான அனுபவம். அண்ணாக்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் குடும்பங்களுடன் வாழ ஆரம்பித்தனர். நான் வேலைக்குச் சேர்ந்த அலுவலகம் வெளி நாடுகளில் உள்ள தொழில் நுட்பங்கள் அறிந்து, சினிமா துறைக்கு வேண்டிய ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு செய்தற்கு தேவையான புதிய கருவிகள்,சினிமா தியேட்டர் டிசைனிங் அதில் ஒலிபெருக்கிகள் இணைத்து வைக்கும் இடங்கள் படம் காட்டிடும் ப்ரொஜெக்டர் ரெகார்டிங் செய்வதற்கு உண்டான கருவிகள் முதலியவைகளை உதிரி பாகங்களாக கொண்டுவந்து அதை இங்கு உற்பத்திசெய்து விற்பனை செய்யும் தொழில் துறையில் மேன்மைபெற்று விளங்கியது. நான் அங்கே அந்த அலுவலகத்தில் விற்பனை பிரிவின் அதிகாரி.அலுவலக முதலாளி என்னிடம் கணினி மூலம் விற்பனையை பற்றி உள்ள அணைத்து செய்திகளையும் அறிந்து அதன் வழி அடுத்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுப்பார். அந்த செய்தியை நான் இந்தியாவில் எல்லா கிளைகளுக்கும் அனுப்பவேண்டும். எனக்கு அந்த பொறுப்பால் முதலாளியை நாள் தோரும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இதனால் எனக்கு வேலைசெய்பவர்கள் கொடுக்கும் மரியாதை மிகப்பெருகியது. இது அங்கு பல ஆண்டுகளாக வேலை பார்த்த சிலருக்கு சிறிது பொறாமையையும் கோபத்தையும் உண்டாக்கியது.அவர்கள் என்னை எவ்வாறு தோற்கடித்து என் செல்வாக்கை கீழே கொண்டு வரலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டனர்.நான் கொடுக்கும் பல செய்திகள் அடங்கிய கோப்புகளை ஆராய்ந்து அவைகளில் உள்ள கணிப்புகளை நான் கொடுப்பதற்கு முன்னே தங்களுடையதாக முதலாளியிடம் சமர்ப்பித்து பெயர் வாங்கும் செயலில் இறங்கினர். அலுவலகத்தில் என்னை நாடு முழுதும் சென்று விற்பனை எவ்வாறு இருக்கிறது,முதலாளியின் செய்வழிமுறை பின்படுத்த படுகிறதா,எதாவது மாற்றம் தேவை படுகிறதா எனக் கவனிக்கும் பொறுப்பைக் கொடுத்தவுடன் அலுவல் காரணமாக வெளியூர் செல்லுவது அதிகரித்தது. விமான பயணம் ஹோட்டல்களில் தங்குவது வாரம் தோறும் நடைபெற்றது.பயணம் உல்லாசமாக இருந்தாலும் விற்பனை குறைந்த மாநிலத்தில் அதிகாரியாக இருப்பவர்கள் என்னை விட வயதில் முதிர்த்தவராக இருந்ததாலும் சில நேரங்களில் அவர்கள் என்னை பார்த்து சிறியவன் இவனுக்கு என்ன தெரியும் என்ற பேச்சுகள் என் காதில் விழுந்தது. ஒரு பக்கம் முதலாளியின் கட்டளை இன்னொரு பக்கம் கிளைகளில் உள்ளவர்களின் எக்காளம் என வருடங்கள் சென்றன.ஒரு முறை இவ்வாறு விமானத்தில் பயணம் செய்த பொழுது என் பக்கத்தில் இருந்தவர் என்னைப் பற்றி அறிந்து கொள்ள பல கேள்விகள் கேட்டு முடிவில் அவரைப் பார்க்க வரச்சொன்னார். அவர் கணினி தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமை அதிகாரி.அவர் என்னை தனது நிறுவனத்தில் வேலை செய்ய அழைத்தார்.நான் என் முதலாளியிடம் இதை பற்றி கூறிட,அவர் அந்த நிறுவனம் மிகவும் பெரியது நன்றாக வளர்ந்து வருகிறது. உனக்கு வேண்டுமானால் அதில் சேர்த்து கொள் கணினி விற்பனை இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளரும். இந்த வாய்ப்பை நழுவவிடாதே எனச் சொல்லி என்னை நல்ல முறையில் வழி அனுப்பினார். .
மற்றவர்களிடம் தோற்பது ஒன்றும் ஒரு புதிய அனுபவமில்லை. ஒவ்வொரு முறையும் நான் தோற்கும் போழுது அடுத்த முறை கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று மனதளவில் தீர்மானிப்பதோடு சரி,பிறகு வழக்கம் போல் ஏதாவது ஒன்றில் சிக்குண்டு வெளிறிய தோற்றுப்போன முகத்துடன் வெளியேறுவேன்.இப்போதெல்லாம் தோற்பது குறித்து என்னால் தொடர்ந்து ரசிப்பான விவாதங்களை உங்கள் முன் வைக்கமுடியும். சரியான விளக்கங்களுடன் மேடையில் பேசி கைத்தட்டல்களைக்கூட பெற முடியும். சிறிதும் கூச்சமில்லாமல் என் தொடர் தோல்விகளை உறவினர்களிடமோ அல்லது நெருங்கிய நண்பர்களிடமோ கூறும் பொழுது முதலில் என்னை வினோதமாகப் பார்ப்பார்கள். பல நேரங்களில் நானே என்னைப் பல முறை கேட்டுக்கொண்டதுண்டு. தோல்வி என்றால் என்ன? என் சுய புராணம் படிப்பதை சிறிது நேரம் மேலே தொடராமல் உங்களுக்கு நீங்களே ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். 90 சதவிகிதத்தினர் அவரவர் தோல்விக்கான காரணங்களை மட்டுமே பட்டியலிடுவார்கள். என்னைக் கேட்டால் நாம் நமக்காக வாழாமல் ஏதோ ஒன்றிற்காக அதைப் போல் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவே மாறாமல் அதை எதிர்க்கும் சந்தர்ப்பங்களில்தான் நாம் தோற்றுப் போகிறோம்.
முதன் முதலாக நான் தோற்கும் போது எனக்கு பத்து வயதிருக்கும். சரித்திரப்பாடத்தில் சொல்லி வைத்தபடி கணேஷ் என்னை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து என்னிடம் பெருமையுடன் காட்டியபோழுது அதை என் முதல் தோல்வியாக நானே வரித்துக்கொண்டேன். பிறகு ஏதாவது ஒரு வழியில் எதிர்பார்க்காத சமயங்களில் பல தோல்விகளை எதிர்கொண்டேன். உயர் பள்ளிக் காலங்களில் சற்றே பருமனான என் உடல்வாகைப் பார்த்து என்னை என்சிசியில் (NCC) செலெட்ஷனில் அவர்கள் பார்வைகளாலேயே அலட்சியப் படுத்தியவர்களிடம் மொத்தமாகத் தோற்றுப்போனேன்.
ஒவ்வொரு முறை நான் தோற்கும் போழுதும் ஏதோ பெரிய இருண்ட பாதாளத்தில் தனியாக குரல் எழுப்பியவாறு விழுந்து கொண்டிருப்பதாகவும் அதன் விளிம்பில் கூட்டமாக நின்று என்னை வேடிக்கை பார்ப்பவர்களின் குரல்கள் படிப்படியாகக் குறைந்து மிகவும் பலவீனமாகக் கேட்பது போலிருக்கும். காலம் செல்ல செல்ல ஒருவாறு மனதில் திண்மைபெற்று அடுத்த தோல்வியை நேருக்கு நேர் ஒரு போர்வீரனைப்போல எதிர்கொள்ள ஆரம்பித்தேன்.
அத்தகைய சந்தர்பங்களில் எனக்கு முழு ஆதராவாக இருந்தது என் அம்மாதான். என் தோல்வியை ஒரு கதையைப் போல அவளிடம் கூறுவேன். விழிகளை உ யர்த்தி என்னையே பார்த்தவாறு எனக்கு தைரியமளிப்பாள். ஒருவர் வெற்றி பெற மற்றொருவர் நிச்சயம் தோற்கவேண்டும் என்ற கூற்றை முழுவதுமாக முறியடித்தவள் அம்மாதான். அவளைப் பொறுத்தவரை தோல்வி என்பது தற்காலிகமாக ஒரு கணக்கை நேர்படுத்துவது போலத்தான். ஒருவன் வெற்றி பெறுவது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு நான் தோற்கவில்லை என்பதும் நூறு சதவிகிதம் உண்மை என்று அவள் கூறும்போது நான் நானாகவே இருப்பதைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள் என்று உணர ஆரம்பித்தேன். அம்மாவின் உணச்சிகளை அறிந்தாலும் அவள் கூறுவதில் ஞாயம் உள்ளது என்பதை உணர்ந்தாலும் என் ஆழ்மனதில் என்னைத் தோற்கடித்த அனைவரையும் ஒட்டு மொத்தமாக தோற்கடிக்க வேண்டும் என்ற குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் ஏதோ ஒன்றாக உருமாற எனக்கு இந்தக் குரல் ஆரம்ப கட்ட உதவிகளைச் செய்தது என்னவோ உண்மைதான். நானும் மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டே இருந்தேன். சரித்திரப்பாடத்தில் என்னை விட மதிப்பெண்கள் எடுத்த கணேஷில் இருந்து நான் தற்போது வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னைவிட கார்ப்பரேட் படிகளில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் என் தகுதியொத்த காமத் வரை என் தோல்வி ஒரு ஒப்பீடு தான் அதை முழுவதுமாக ஒப்புக்கொள்வதை மனதளவில் மறுக்க ஆரம்பித்தேன். நான் நானாக இருப்பதில்தான் எனக்கான முழு வெற்றி என்று தெரிந்தும் எனக்குள்ளே உருமாற்றம் அதிவேகமாக அடுத்தவர் சாயலில் நிறைவேறிக்கொண்டேயிருந்தது.
நான் பலரிடம் தோற்றிருந்தாலும் அதிகம் என்னைப் பாதித்த ஒருவரையாவது நான் நிச்சயம் தோற்கடித்தேயாக வேண்டும் என்ற திடமான முடிவிற்கு வந்தேன். முதலிலிருந்து பெயர்களைப் பட்டியலிட்டேன்.கணேஷில் இருந்து காமத் வரை ஒரு திரைப்படம் போல மனதில் உருவங்கள் தோன்றி மறைந்தது. ஒரு சிலர் என்னை வெற்றி பெற்றாலும் என்னைத் தேற்கடித்ததாக ஒப்புக்கொள்ளத் தயங்கியவர்களை என் ஹிட் லிஸ்டில் இருந்து எடுத்துவிட்டேன். இறுதியில் கிடைத்தது ஐந்து வெற்றியாளர்களின் பெயர்கள். அவர்களை வரிசைப்படுத்தியதில் முதலில் இருந்தான் அவன். அவனை நோக்கி என் காய்களை வெகு சாதுர்யமாக நகர்த்த ஆரம்பித்தேன். என் உருமாற்றம் 70 சதவிகிதத்திற்கு மேல் தாண்டிவிட்டது. அன்று மே ஒன்றாம் தேதி லேபர் டே பம்பாயில் வழக்கம் போல போக்குவரத்து நெரிசல். மனதிற்குள் சபித்துக்கொண்டேன். அன்று எங்களின் அலுவலகம் விடுமுறை. இருந்தும் நான் சென்றிருந்தேன். என் குழுத்தலைவனும் என்னைக் கண்காணிக்க வந்திருந்தான். அவன் வருவதற்கு முன்பே என் திட்டத்தையும் அதை நிறைவேற்றும் முறைகளையும் விவரித்து அறிக்கையை வேகமாகத் தயார் செய்து அவன் மேஜையில் வைத்துவிட்டேன். ஒரு புன்னகையுடன் என்னைக் கடந்து அவன் கேபினில் போய் அமர்ந்தான். என் திட்ட அறிக்கையை அவன் படிப்பது கண்ணாடி வழியாகத் தெரிந்தது. அடிக்கடி பாராட்டும் பாவனையில் மேஜையைத் தட்டுவதும் என்னைப் பார்ப்பதுமாக இருந்தவன் திட்ட அறிக்கையுடன் என்னை நோக்கி வந்தான். “மார்வலஸ் ராம்! எவ்வளவு தெளிவாக யோசித்து செய்திருக்கிறாய்.உள்ளம் நிறைந்த பாராட்டுகள். நீயே தலைமையேற்று இந்தப் பிராஜெக்டை நடத்து. நான் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். ஒரு மாதத்தில் நீ அமெரிக்கா போக வேண்டியிருக்கும். அவசியமென்றால் நானும் உன் துணைக்கு வருகிறேன். "வாழ்த்துக்கள்” தன் கேபினிற்கு சென்ற குழுத்தலைவன் மீண்டும் என்னை நோக்கி வந்தான், வியப்புடன் என்னை உற்றுப்பார்த்தவன் “வாட் ராம் ,உன் பெயரில் கையெழுத்து போடு .
தாமதமாக வந்த காமத் முதலில் குழுத்தலைவனை அவன் கேபினில் சந்தித்துவிட்டு வெளியே வந்து செருமிக் கொண்டே என்னைக் கடந்து போனான். முதல் முறையாக அவனை கீழே இறக்கிய என் வெற்றி அவன் முகத்தில் கோபத்தையும் சிரிப்புக்கு பதில் ஏமாற்றத்தையும் குடி கொள்ள வைத்திருந்தது. இந்த செய்தியை அவனால் தாங்க முடியவில்லை எல்லோரிடமும் தான் அமெரிக்கா செல்வதாக கூறி இருந்தான்.இப்பொழுது அந்த ப்ராஜெக்ட் எனக்கு கொடுக்கப்பட்டது என அறிந்ததும் அவன் கோபத்தால் ஆட்கொள்ளப்பட்டு தனது அறையில் இருந்து கதவை அறைந்து மூடி கொண்டு வெளியே சென்றான். என் வெற்றியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. என் அறிக்கையை தனதாக்கி உள்ளே கொடுக்க திட்டமிட்டிருந்தான். நான் அதை அவனுக்கு முன்னாள் கொடுத்து விடுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை.
எனக்குள்ளே ஒரு மகிழ்ச்சியான குரல் நீ சரியான நேரத்தில் ஜெயித்துவிட்டாய் இனி உன்னை யாராலும் கீழே தள்ளி அதை பார்த்து சிரிக்க முடியாது.அமெரிக்காவில் இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்தால் உயர செல்வது தான் ஒரே வழி. தோல்விக்கு இனி இடமில்லை. அன்று நான் அமெரிக்காவில் கால் வைத்து,ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடிந்தபின், இன்றும் இங்கேயே வாழ்ந்து வருகிறேன். பல நிறுவனங்களில் விற்பனை அதிகாரியாக பணி செய்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன். தோல்வியை படிகளாக வைத்து கடுமையாக உழைத்து வெற்றி அடைவதில் வரும் மனநிறைவு மிக அருமையானது என்ற ஒரு பாடத்தை நான் அறிந்து கொண்டு அதனால் பெருமிதம் கொள்கிறேன்.

எழுதியவர் : கே என் ராம் (27-May-23, 7:13 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 95

மேலே